சைபர் செக்யூரிட்டி படிப்பு அறிமுகம்
பெங்களூரு: அடுத்த கல்வி ஆண்டு முதல், அனைத்து பல்கலைக் கழகங்களிலும், சைபர் செக்யூரிட்டி படிப்புகள் துவங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பால், இளம் தலைமுறையினருக்கு அனுகூலமாக இருக்கும், என, உயர் கல்வித்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், தகவல் தொடர்பு அத்தியாவசியமாகியுள்ள இந்த நிலையில், சைபர் பாதுகாப்பு விஷயம், ஒட்டு மொத்த உலகத்துக்கும் சவாலாக உள்ளது. பல்கலைக் கழகங்களில், இது தொடர்பான கல்வி அளிப்பதன் மூலம், அந்த சவாலை எதிர்கொள்ள வல்லுனர்களை உருவாக்க வேண்டுமென்பது அரசின் நோக்கம். தற்போதைய ஆய்வின்படி, நாட்டுக்கு, ஒரு லட்சம் சைபர் பாதுகாப்பு வல்லுனர்களும், சர்வதேச அளவில், பல லட்சம் வல்லுனர்களும் தேவைப்படுகின்றனர்.
சைபர் பாதுகாப்பு கல்வியால், இளம் தலைமுறையினருக்கும் அனுகூலமாக இருக்கும்; வேலை வாய்ப்பு அதிகமாகும்.அடுத்த கல்வி ஆண்டு முதல், மாநிலத்தின் அனைத்து பல்கலைக் கழகங்களிலும், சைபர் பாதுகாப்பு படிப்புகள் துவங்கப்படும். பல்கலைக் கழகங்களின் திறனை மதிப்பீடு செய்யவும், அரசு தீர்மானித்துள்ளது. கல்வி தரம், ஆசிரியர்களின் திறன், உட்பட பல விஷயங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.