விடைத் தாள் நகல் பெற பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் வசூலிக்க தடை: தகவல் ஆணையம்
விடைத்தாள் நகல் பெற கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வசூல் செய்யும் வசூல் வேட்டைக்கு மத்திய தகவல் ஆணையம் தடைவிதித்து பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் வசூலிக்க தடை விதித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மத்திய தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில் மத்திய தகவல் ஆணையம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆப்னே இன்கிடி என்ற மாணவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தனது விடைத்தாள் நகல்களை கேட்டு மனு செய்திருந்தார், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் விடைத்தாள் ஒன்றுக்கு ரூபாய் 750 வீதம் ஐந்து விடைத்தாள்களுக்கு ரூபாய் 3750 கட்டுமாறு கூறியது.
பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மாணவர் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம் பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவுக்கு கண்டம் தெரிவித்து இது அரசியலமைப்பு சட்டம் 14 வது பிரிவுக்கு எதிரானது என சுட்டிக்காட்டினர்.
மேலும் பாராளுமன்றம் தகவல் உரிமைச் சட்டத்துக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிக்க முடியாது. டெல்லிப் பல்கலைக்கழகம் அல்லது வேறு எந்த பல்கலைக்கழகம் மற்றும் எந்த பொது நிறுவனங்களும் தகவல் உரிமைச் சட்டத்தை மீற முடியாது என குறிப்பிட்டனர்.
தகவல் ஆணையர் ஸ்ரீதர் இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும், நிகர்நிலைப் பல்கலைகழகங்களும், தேர்வு நடத்தும் அமைப்புகளும் மாணவர்களின் விடைத் தாள்களைப் பெறுவதற்கு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் வசூல் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் மூலம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் நடத்தும் வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.