தமிழநாட்டிற்கான ரூ.2152கோடி கல்விநிதியை மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிள்ளதாக முதல்வர் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் மத்திய அரசை தமிழ்நாட்டின் கல்வி நிதியை மாற்றியதற்காக கண்டித்துள்ளார். PM SRI ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி தள்ளிவைக்கப்பட்டது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கான 2152 கோடி ரூபாய் கல்வி நிதியை வேறு மாநிலங்களுக்கு வழங்கியதன் மூலம் தங்களது உரிமைக்காக போராடும் மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே சமயம், PM SRI திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத காரணத்தால் நிதி ஒதுக்கீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்புள்ளது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டமான சமக்ர சிக்ஷா அபியான் மூலம் மத்திய, மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதியை பகிர்ந்து கொள்ளும். இவற்றை கொண்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் மேம்பாடு, ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி, திறன் மேம்பாடு, மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்டவற்றுக்கு செலவிடப்பட்டு வருகிறது.
ஆனால், நடப்பாண்டு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு, பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான PM SRI திட்டத்தில் தமிழ்நாடு இணைய மறுத்ததால் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.