கல்விக் கண் திறந்த மாமனிதர் கல்விகுரு காமராசர்
அர்ப்பணிப்பு உணர்வும், பிறருக்காக வாழும் உள்ளமும், எளிமையும் எனப் பல பண்புகளை மக்களுக்காக விட்டுச் சென்றவர். அறிவுச் சுடர் என்பதையே அறியாது, வாழ்வும் மனமும் வறுமையில் வாடிப்போய்க் கிடந்து, செய்வதறியாது தவித்த மக்களுக்கு ஒளி விளக்காக விளங்கும்கல்வியைத் தருவதையே முதற்கடமை யாகக் கொண்டிருந்தவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கு.காமராஜர்.
பள்ளிகள் இல்லாத கிராமங்கள் எங்கும் பள்ளிக் கூடங்களைத் திறந்ததோடு, ஒருவேளை உணவு காரணமாகக் கல்வியைத் தவிர்த்த ஏழை எளிய மாணவர்களுக்காகவே மதியஉணவு திட்டம் கொண்டு வந்தவர். மக்களுக்கான சேவையை தனதுஎண்ணமும் செயலுமாகக் கொண்டதால் தான், மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கு வறுமைக்கோட்டிலிருந்த, கைரேகை மட்டுமே வைக்கத் தெரிந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கே இடம் கொடுத்தவர்.
அதிகாரம் என்ற ஒன்று தன்னிடம் இருப்பதனைக் கல்விக் கூடங்கள் திறக்கவும், தொழிற்கூடங்கள் உருவாக்கவும் நாட்டு நலத்திட்டங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அசாத்திய மனிதர் அவர். நேரம் தவறாமை... தள்ளிப்போடும் வழக்கத்தைக் கிள்ளிப்போட்டவர். அன்றாடப் பணிகளை அன்றே செய்து முடித்துவிடவும், அடுத்தநாள் பணியை முதல் நாளிலேயே திட்டமிடும் வழக்கமும் காமராஜரின் 9 ஆண்டுகால முதல்வர் பணிக்கு அச்சாரமாக விளங்கின.
மக்களுக்காகத் தனது பணிக்காலத்தில் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தான குறிக்கோளைக் கொண்டிருந்ததில் வியப்பு ஏதுமில்லை. எனவேதான், நாடு முழுவதும் அணைகள், தொழிற்கூடங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் உருவாயின. நாட்டினை வழிநடத்திச் செல்ல சிறந்ததலைமையை உருவாக்கும் வழிகாட்டியாக காமராஜர் விளங்கியது இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட்ட அற்புதமாகும்.
நாட்டினை வழிநடத்திச் செல்ல இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதில் தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே 1963-ம் ஆண்டில் தனது முதல்வர் பதவியைத் துறந்தவர் காமராஜர்.
மூன்று முக்கிய கூறுகள்: 'இவரைப்போல் வேறு ஒருவர் இனிஇல்லை' என்று வாழ்ந்து காட்டிய காமராஜரின் வழியில் 'நல்ல மனிதர்கள்' உருவாக வேண்டியதே இன்றைய கால கட்டத்தின் அவரசத் தேவையாகும். 'நல்ல மனிதர்களை' உருவாக்கும் விதமான கல்வி மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். அதாவது சிந்திக்கும் மூளை (Head to think) செயல்படும் கரங்கள் (Heads to serve) கருணை காட்டும் இதயம் (Heart to feel good) என்பதாகும்.
தனக்குமட்டும் நன்மை தரும்விதமாக குறுகிய நோக்கில் சிந்திக்காமல், சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் நன்மை தரும்விதமாகச் சிந்திக்கும்படியாக இன்றைய மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு, அறிவியலுடன் அறவியலையும் மனிதநேயத்தையும் பொருளாதாரத்துடன் தேசப்பற்றையும் மாணவர்களுக்குக் கற்றுத் தரவேண் டும்.
என்ன வேண்டும் இளைஞர்களுக்கு? - எந்த வேலையிலும் ஏற்றத் தாழ்வு இல்லை. அந்த வேலையைச் செய்யும் விதத்தில்தான் ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதை உணர்ந்து சொந்தக் காலில் நிற்கவும், சுயமாக உழைத்து உயரவும் தேவையான தன்னம்பிக்கையும், துணிச்சலும், மனிதநேயமும், கருணையுள்ளமும் உடையவர்களாக இளைஞர்களை உருவாக்க வேண்டும்.
மொழி, மதம், நம்பிக்கை (Faith) போன்றவற்றால் மாறுபட்டு இருந்தாலும் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் அதாவது தன்மானம் மிக்க தமிழர்களாகவும், இதயம் கொண்ட இந்தியர்களாகவும் மாண்புநிறைந்த மனிதர்களாகவும் இளைஞர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.
நாம் செய்யும் நன்றிக் கடன்: ‘கல்வி கற்பதும் அறிவு பெறுவதும் அன்பு செய்யவே, அன்பு செய்வதும் பண்பு காப்பதும் அறம் வளர்க்கவே' என்பதை மாணவர்கள் நெஞ்சில் பதியவைப்பதின் மூலமாக, கல்விசாலைகளை நிறுவிய கல்விக் கண் திறந்தமகானாகிய பெருந்தலைவர் 'பாரத ரத்னா' காமராஜருக்கு நாம் செலுத்தும் நன்றி ஆகும்.