நாடு முழுவதும் புதியதாக 100 சைனிக் பள்ளிகள் !
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்:
நாடு முழுதும் தற்போது 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சொசைட்டியின் கீழ் இவை இயங்குகின்றன. ராணுவத்தில் அதிகாரிகளாக சேருவதற்கான பயிற்சி அளிக்கும் வகையில் நாடு முழுதும் சைனிக் இணைப்பு பள்ளிகள் திறக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியாருடன் இணைந்து, 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 'ஸ்வச் பாரத்' எனப்படும் தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தை 2025 - 2026 ஆண்டு வரை செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு போன்றவற்றை மேற்கொள்ள 1.41 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்த இரண்டாம் கட்டத்தில் மத்திய அரசு தன் பங்காக 36 ஆயிரத்து 465 கோடி ரூபாய் செலவிடும்.பெரு நகரங்களில் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ், வரும் 2025 - 2026 ஆண்டு வரை, 2.77 லட்சம் கோடி ரூபாய் செலவிடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் பங்கு 76 ஆயிரத்து 760 கோடி ரூபாய்.இதைத் தவிர ஊட்டச்சத்து அதிகம் உள்ள உரங்களுக்கு 28 ஆயிரத்து 655 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.