நீட் மறுதேர்வு நடத்த முடியாது உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வில் கேள்வி - பதில் தாள் மாற்றித் தரப்பட்டதால் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மறுதேர்வு நடத்தும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்தாண்டு செப்டம்பர் 12-ல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. ஐதராபாத், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 3 பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளனர். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 710 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் நீட் கேள்வி - பதில் மாற்றி வழங்கப்பட்டதாக இருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு சிறப்பு நீட் தேர்வு நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அக்டோபர் 28 அன்று இவ்வுத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் நேன்று (நவம்பர் 12) மீண்டும் அம்மனு விசாரணைக்கு வந்தது. 16 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு தவறுக்காக மறு தேர்வை நாடுவார்கள். அப்படி மறுதேர்வு வைப்பது சாத்தியமில்லை என மத்திய அரசு கூறியது.
அதனை ஏற்ற நீதிபதி எல்.என்.ராவ், “மாணவர்களுக்காக நாங்கள் வருந்துகிறோம், அவர்கள் மீது அனுதாபம் கொள்கிறோம், ஆனால் மறுதேர்வு நடத்த முடியாது.” என கூறி மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தார்