ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அறிவுரை
ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து, பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும்' என பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புதிய தொழில்நுட்ப காலத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடம் பிரபலமாகி உள்ளன. இதை விளையாடும் குழந்தைகள், நாளடைவில் அடிமையாகி விடுகின்றன. கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்றவற்றில் விளையாடுகின்றனர்.இது, மாணவர்களிடம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இவற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.ஆன்லைனில் குழந்தைகள் செய்யக்கூடாதது; செய்யக்கூடியவை எவை என்ற விபரங்களை, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
பெற்றோர் அனுமதியின்றி, ஆன்லைன் விளையாட்டுகளை வாங்கவோ, விளையாட்டு, 'மொபைல் ஆப்'களை வாங்கவோ அனுமதிக்கக் கூடாது.பெற்றோர் தங்களின், 'டெபிட், கிரெடிட் கார்டு'களை, குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இணையதளங்களில் இருந்து, விளையாட்டு மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. பதிவிறக்கம் செய்ய தங்களைப் பற்றிய சுய விபரங்களை வழங்கக் கூடாது.குழந்தைகள் அதிக நேரம் ஆன்லைனில் செலவிடுகின்றனரா; சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.
தேவையற்றதை பார்ப்பதை தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை அவசியம். எதையெல்லாம் பார்க்கலாம்; பார்க்கக் கூடாது என்பதை, பெற்றோரும், ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் விளையாட்டின் விபரீதம் குறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.