IT Return தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. நிர்மலா சீதாராமன் தந்த சலுகை
வருமான வரி ரிட்டர்ன் தாக்கலுக்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் நேற்றைய உரையைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் அறிவித்திருந்த ரூ. 20 லட்சம் கோடி நிதித் திட்டங்கள் குறித்து விவரித்தனர்.
இன்றைய அறிவிப்புகளில் முக்கியமாக பார்க்கப்படுவது சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான சலுகைகள், ரியல் எஸ்டேட் தொழிலுக்ககான சலுகைகள், பிஎப் சலுகைகைள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்வோருக்கான சலுகைகள் ஆகியவைதான். இதில் நேரடி வரி சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அனைத்து வருமான வரி ரிட்டர்ன் தாக்கலுக்கான தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019-2020ம் நிதியாண்டுக்கான ரிட்டர்ன்களை 2020ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
அதேபோல வரி தணிக்கைக்கான கடைசி தேதியும் 2020, செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து அக்டோபர் 31ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் அபராதம் இல்லாமல் வரி செலுத்தும் திட்டமான விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் காலமும் 2020, டிசம்பர் 31ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.