பள்ளிக்கு செல்லாமல் பயிற்சி மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் - சிபிஎஸ்இ பள்ளிகளில் என்ன நடக்கிறது?
இந்தியாவில் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டுகளும் பள்ளிக்குச் செல்லாமல், பாடங்களைப் படிக்காமல், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதாக சி.பி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சி.பி.எஸ்.இ பள்ளிகளும் பயிற்சி மையங்களும் இதற்கென தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு, அம்மாணவர்கள் பொதுத்தேர்வில் மட்டும் கலந்துகொள்ளும் வண்ணம் போலியாக அவர்களுக்கு வருகைப்பதிவும் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நுழைவுத்தேர்வுகளுக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவத்தால் பள்ளிப் படிப்புக்கான தேவை குறைந்து வருவதாகவும் இதனால், மாணவர்களிடையே கற்றல் செயல்பாடு வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் (CBSE) இந்தியா முழுவதும் 24,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 30க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகளில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் CBSE ஆய்வு செய்தது.
அந்த ஆய்வில், 23 பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அந்த இரண்டு ஆண்டுகளும் பள்ளிக்குச் செல்லாமல், NEET JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பயிற்சி மையங்களுக்கு அனுப்பப்படுவதாக, ‘தி டெலிகிராஃப்’ இணையதளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.