தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தது இஸ்ரோ தலைவராக உயர்ந்தது எப்படி?
ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை வல்லுநரான முனைவர் வி.நாராயணன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(ISRO) அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் ஏற்கனவே இஸ்ரோ தலைவராக பதவி வகித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் ஒரு தமிழர் ISRO தலைவராகிறார்.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிலையத் திட்டம், ககன்யான் திட்டம் என இந்தியாவின் விண்வெளித் துறை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், ISRO தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு அடுத்ததாக அவர் பதவியேற்கவுள்ளார்.
முனைவர் நாராயணன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக இருந்து வருகிறார். சந்திரயான் 1, 2, 3, மங்கள்யான் திட்டம், ஆதித்யா எல்1, ககன்யான் திட்டம் ஆகிய முக்கியத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை அவர் செய்துள்ளார்.
இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத் தகவல்களின்படி, இந்தியாவின் விண்வெளி உந்துவிசை அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் வெற்றியில் நாராயணனின் பங்கு மிகவும் முக்கியமானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற நாராயணன் இஸ்ரோ தலைவராக உயர்ந்தது எப்படி? அவர் செய்த சாதனைகள் யாவை? முழு பின்னணியைப் பார்க்கலாம்.
முனைவர் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, இஸ்ரோவில் உதவியாளர் நிலையில் பணிக்குச் சேர்ந்து, இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். இதற்குப் பின்னால் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை," என்று பாராட்டியுள்ளார்.
மேலும், அவரது பயணம், பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும், என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1984ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உறுப்பினராக இணைந்த போது நாராயணனின் இஸ்ரோ பயணம் தொடங்கியது. அவரது ஆரம்பக்கால ஆண்டுகளில், சவுண்டிங் ராக்கெட்டுகள், ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஆகியவற்றுக்கான திட உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் பணியாற்றினார்.
கடந்த 1989ஆம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் எம்.டெக் கிரையோஜெனிக் பொறியியல் பாடப்பிரிவில் முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தச் சாதனை, கிரையோஜெனிக் உந்துவிசையில் அவரது பணியின் தொடக்கமாக அமைந்தது. பிற்காலத்தில் அந்தத் துறையில் தவிர்க்க முடியாத வல்லுநராக உயர்ந்தார் முனைவர் நாராயணன்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் பணியாற்றி வரும் அவர், ராக்கெட் உந்துவிசை, கிரையோஜெனிக் அமைப்புகள், செயற்கைக்கோள் உந்துவிசை ஆகிய துறைகளில் அற்புதமான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்ததாக எல்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது. சந்திரயான், மங்கள்யான் உள்பட இஸ்ரோவின் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டு அனுபவம் மற்றும் அவரது நிபுணத்துவம் இஸ்ரோவின் மேம்பட்ட உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அவரது பங்களிப்புகள் சிக்கலான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளைக் கொண்ட உலகின் ஆறு நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உயர்த்தியது. 2017-2037 வரையிலான 20 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் உந்துவிசை திட்டங்களுக்கான பாதையை அவர் இப்போதே இறுதி செய்துவிட்டார்," என்று எல்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது.
விண்வெளிப் பொறியியலில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் ஐஐடி காரக்பூரில் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது வழங்கி முனைவர் நாராயணன் கௌரவிக்கப்பட்டார்.
முனைவர் நாராயணனின் தலைமை இந்தியாவின் விண்வெளி உந்துவிசை அமைப்புகளின் எதிர்காலத்தை வடிவமைத்துள்ளதாகவும் அவரது பங்களிப்பு இஸ்ரோ முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதாகவும் எல்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது.
திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் இயக்குநராக, 41 ராக்கெட் மற்றும் 31 விண்கலப் பயணங்களுக்கான 164 திரவ உந்துவிசை அமைப்புகளை வழங்குவதை அவர் மேற்பார்வையிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோவை வழிநடத்தப் போகும் அவரது தலைமையில், அதன் எதிர்காலத் திட்டங்களான ககன்யான், சந்திரயான்-4, இந்திய விண்வெளி நிலையம், மங்கள்யான்-2, சுக்ரயான் ஆகிய முக்கியத் திட்டங்களுக்கான பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.