மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும் கல்வித்துறையை சிறப்பாக செயல்படுத்துவோம்

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கும் வரை கல்விக்கான நிலுவை தொகை அளிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், இந்தி திணிப்பு கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிதி விடுவிக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையில், அதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.
பாஜகவின் கையெழுத்து இயக்கம் தொடர்பான கேள்விக்கு, பாஜக 90 நாட்கள் போவது அவர்களுக்கான பயணமாக பார்க்கவில்லை. அதனை எங்களுக்கான பயணமாகவே பார்க்கிறேன். 90 நாட்கள் களத்திற்கு செல்லும் போது, பாஜகவினரே வருத்தப்படும் பயணமாக இருக்கும். அதேபோல் இந்த பள்ளியை மூட வேண்டும், அந்தப் பள்ளியை மூட வேண்டும் என்று சொல்லாதீர்கள்.
ஏனென்றால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 25 ஆயிரம் பள்ளிகளை மூடிவிட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்வியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்கள். உ.பி., பீகார், மத்தியப் பிரதேசம் என்று அனைத்து மாநிலங்களிலும் பள்ளியை மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். இது ஜனநாயக நாடு. அனைவரையும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
ஆனால் அரசுப் பள்ளியில் நிறைய திட்டங்கள் கொண்டு வருகிறோம், நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். குழந்தைகள் பள்ளிக் கல்வியில் இருந்து வெளியில் சென்றுவிடாமல், படிக்கிற வயதில் படிப்பிலேயே கவனம் செலுத்த வேண்டும். கல்வி சார்ந்த நிறுவனங்களில் சேர வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
எது எப்படியாக இருந்தாலும், மார்ச் 1ஆம் தேதி புதிய அட்மிஷன்களுக்கான பணியை தொடங்கப் போகிறோம். எங்களின் கடமையை நாங்கள் செய்து கொண்டே இருப்போம். மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை உங்கள் மாநிலத்தோடு வைத்து கொள்ளுங்கள். எங்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எங்களுக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.