டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் – 6ம் வகுப்பு மாணவி வேண்டுகோளை உடனே நிறைவேற்றிய முதன்மை செயலர்
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 1ம் தேதி முதல் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில் அரியலூரில் படித்து வரும் 6 வகுப்பு மாணவி ஒருவர் தான் படிக்கும் பள்ளிக்கு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நீக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் தன்னுடைய கைப்பட கடிதம் ஒன்றை எழுதி மனு கொடுத்துள்ளார். இந்த கடிதம் பத்திரிக்கையாளர் ஒருவர் வாயிலாக தலைமைச் செயலாளர் வெ. இறையன்புக்கு அனுப்பப்பட்டது. அரியலூர் மாவட்டம் நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளியின் அருகே அரசின் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு இந்த கடை செயல்படுவதால் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அந்த மாணவி.
இந்த செய்தியை அறிந்த அவர், உடனே அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து கடை மாற்றப்படும் என்ற உறுதியை மாவட்ட ஆட்சியர் அளித்துள்ளார். பள்ளி திறப்பதற்கு முன்பு இந்த டாஸ்மாக் கடை அப்புறப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. மாணவியின் புகாரை கருத்தில் கொண்டு அக்கறையுடன் செயல்பட்ட தலைமைச் செயலாளர் இறையன்புக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.