சாலையோர குழந்தைகள் அதிகரித்துள்ளனர் சுகாதார முகாம், பள்ளி கல்வி தேவை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
நாடு முழுதும் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடிப்படை வசதிகள் இன்றி அடுத்த வேளை உணவுக்கு கையேந்த வேண்டிய நிலையில் உள்ள இந்த குழந்தைகள், பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, சாலையோரம் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை முறையாக கணக்கிட்டு, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைக்க அரசு உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நகரங்களின் பரபரப்பான போக்குவரத்து சிக்னல், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் குழந்தைகள் பிச்சை எடுக்கும் காட்சியை அன்றாடம் காண்கிறோம்.
இவர்கள், கல்வி கற்க வேண்டிய வயதில் எதற்காக சாலைகளில் சுற்றி திரிகின்றனர் என்பதை சிந்தித்து இருக்கிறோமா?பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஒரு ரகம் என்றால், காலணிகளுக்கு 'பாலிஷ்' போடுவது, குப்பை அள்ளுவது, பலுான்கள் விற்பது, கார்களை துடைப்பது, கட்டுமான பணிகள், தேநீர் கடைகள் என, எங்கெங்கும் இந்த சாலையோர குழந்தைகள் வியாபித்து இருக்கின்றனர்.
நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் இவர்களை நாம் கடந்து வந்து கொண்டே தான் இருக்கிறோம்.இது போன்ற குழந்தைகளை, 'யுனிசெப்' எனப்படும் ஐ.நா., குழந்தைகள் நிதியம் நான்கு வகையாக பிரிக்கிறது. குடும்பத்தினருடன் வசித்துக் கொண்டே பிழைப்புக்காக சாலையோரங்களில் உழைப்பவர்கள் அல்லது பிச்சை எடுப்பவர்கள், குடும்பத்தினர் இருந்தும் அவர்களுடன் தொடர்பின்றி சாலையிலேயே வசிப்பவர்கள், ஆதரவற்ற அனாதை குழந்தைகள் என்று இவர்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளனர்.
குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் குழந்தைகள் பெரும்பாலும் குடும்பத்தை பிரிந்து நகர்ப்புறங்களுக்கு ஓடி வருகின்றனர். பணி இடங்களில் உழைப்பு சுரண்டல்களுக்கு ஆளாவதோடு, பணத்துக்காக இவர்கள் கடத்தப்படுவதும் நடக்கிறது. சாலையோரம் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து, 'ரெயின்போ ஹோம்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், 20 ஆண்டுகளாக பல்வேறு நகரங்களிலும் ஆய்வு மேற்கொண்டது.
இதில், 1.80 கோடி சாலையோர குழந்தைகள் நாடு முழுதும் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.டில்லி, மும்பை, கோல்கட்டா உட்பட 10 நகரங்களில், 'சேவ் தி சில்ரன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், இரண்டு லட்சம் சாலையோர குழந்தைகள் உள்ளதாக கணக்கிட்டுள்ளது.
டில்லியில் மட்டும் 81 ஆயிரம் குழந்தைகள் சாலையோரம் வசிப்பதாக தெரியவந்தது. குழந்தைகள் கணக்கெடுப்பில் பல்வேறு வழி முறைகள் மற்றும் வகைப்படுத்தல்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பின்பற்றுவதால், எண்ணிக்கையில் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன.
எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு போல முறையான அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு நடத்துவது தற்போதைய அவசியமாகிறது.இந்த கணக்கெடுப்பு அவ்வப்போது நடத்தப்பட வேண்டும் என்பதும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.சாலையோரங்களிலும், குடிசை பகுதிகளிலும் குடும்பத்துடன் வசிக்கும் குழந்தைகள் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்; சமூகத்தால் கைவிடப்பட்டதாக உணர்கின்றனர்.
குடும்ப ஒற்றுமை, சமூக பாதுகாப்பு, கண்ணியமான வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் இல்லாமை ஆகியவை, இந்த குழந்தைகளை தவறான பாதையில் செலுத்துவதாக 'சேவ் தி சில்ரன்' அமைப்பின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மனு தாக்கல்இதன் விளைவாக சமூகத்திற்கு தேவையற்ற குழந்தைகளாகவும் தங்களை அடையாளப்படுத்தி கொள்வதாக ஆய்வு கூறுகிறது.
கொரோனா தொற்று பரவலை அடுத்து, சாலையோர குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் கடும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும், குறிப்பாக பெண் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து இருப்பதாகவும், நீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறும் வழக்கறிஞர் கவுரவ் அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், சாலையோர குழந்தைகளை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ள நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த, அனைத்து மாநில கலெக்டர்களுக்கும் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தற்போது கவனம் பெற்றுள்ளது.நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்து வந்தாலும், சாலையோர குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, இந்த உதவி கடலில் சிறு துளி என்றே கூறப்படுகிறது.எனவே, நகர்ப்புறங்களைச் சேர்ந்த கைவிடப்பட்ட குழந்தைகள், குறிப்பாக தெருவோர குழந்தைகளின் துல்லியமான மதிப்பீடுகளை அறிய, வழக்கமான கணக்கெடுப்புகளை நடத்துவது அவசரத் தேவையாக உள்ளது.
எந்தெந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகளவில் வசிக்கின்றனர் என்ற விபரங்களை மாநிலங்கள் மற்றும் மத்திய புள்ளியியல் நிறுவனங்கள் திரட்டி, அவர்களுக்கான சுகாதார முகாம்களை நடத்தவும், பள்ளி கல்வி அளிக்கவும் கோரிக்கை வலுத்து உள்ளது. 'குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம்' என வசனம் பேசுவதை கைவிட்டு, இப்போதே நடவடிக்கையில் இறங்கவில்லை எனில், இனி எப்போதும் இல்லை என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது