தேசிய அறிவியல் தினம் கொண்டாடக் காரணம்

தேசிய அறிவியல் தினம் 1986 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீப காலம் வரை, சில பள்ளிகள், இதனை, “சர்.சி. வி.ராமன் பிறந்த நாளை ஒட்டி அனுஷ்டிக்கப்படுவதாகவே” தங்கள் பள்ளி நாட்குறிப்பில் குறிப்பிட்டு வந்தன. படிப்படியாக மாறி வந்துள்ளது. இன்னும் அப்படி உள்ளதா என்று தெரியவில்லை.
பல தேசிய சர்வதேசிய நாட்கள், அந்த குறிப்பிட்ட நாள் கொண்டாட்டத்திற்கு கூடுதல் பங்களிப்பு செய்த மனிதர்களை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது. அப்படித் தான் இதுவும் இருக்கும் என்ற பார்வை அல்லது சிந்தனையே தேசிய அறிவியல் தினத்திற்கு எதிரானது. Na
இந்திய தேசிய அறிவியல் குழுமத்தின் பரிந்துரையின் பேரில் 1986-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் தேசிய அறிவியல் தினம் சர்.சி. வி.ராமனைப் போற்றுவதற்காக அல்ல. அது ஒரு குறியீடு. அதனால் தான் அவர் தனது கண்டுபிடிப்பை வெளி உலகிற்கு அறிவித்த நாளான பிப்ரவரி 28ஐ தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.
அப்படி எனில் இப்போது தேசிய அறிவியல் தினத்தை நாம் எதற்காக கொண்டாட வேண்டும்? என்னென்ன விசயங்களை இதில் இணைத்து பார்க்க வேண்டும்? இதன் தற்கால முக்கியத்துவம் என்ன என்பதை அறிந்து இதனைக் கொண்டாட வேண்டும். அப்படி தேசிய அறிவியல் தினத்தின் இன்றைய பொருத்தப்பாட்டை நினைத்துப் பார்த்தால் கீழ் காணும் தேவைக்காக தேசிய அறிவியல் தினத்தை நாம் எல்லோருமே ஆராதிக்க வேண்டும் என்பது புரியும்.
அறிவியல் தினம் என்று ஒன்று ஏன் தேவை. அதனை அடிப்படையாகக் கொண்டு எதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும் என்பது குடிமக்கள், சமூகம், அரசு, ஆட்சியாளர்கள் என எல்லோருக்கும் பொருந்தும். இன்றைய சூழலில் எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு, கீழ் காணும் பிரச்சினைகளில் நம் அனைவரின் மனதும் மையம் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
அறிவியல் தினம் ஏன் தேவை?
நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வழியாக நமக்கு பல்வேறு ஆயுதங்கள் கையில் கிடைத்துள்ளன. அவற்றுள் நம் முன் குவிந்து கிடக்கும் ஊடகங்களும் ஒன்று. இதனை ஒரு கருவியாக பயன்படுத்தி கட்டுக்கடங்காத மூடநம்பிக்கை பரப்பப்படுகின்றன. போலி அறிவியல் பெரிய பிரச்சாரமாக எடுத்துச் செல்லப் படுகிறது. Misinformation மற்றும் Disinformation என்ற இரண்டு விதமான தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. இவை இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் பரப்புரை செய்பவர்களுக்கு நன்கு தெரியும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது உச்சம் பெற்று உலக சுகாதார நிறுவனம் இதற்காக ஒரு சொல்லாடலை உருவாக்கியது. Infodemic என்று அதற்கு பெயர். தகவல் பெரும்பரவல் என்று இதனைச் சொல்லலாம். இந்த தகவல் பெரும் பரவல் என்பதில் அறுதிப் பெரும்பான்மையாக பொய்த்தகவலே பெரும் பாய்ச்சல் வேகத்தில் உலகம் முழுவதும் பரவியது. அது கொரோனா பெருந் தொற்றை காட்டிலும் பாதிப்பை உருவாக்கியது. கொரோனா பெருந் தொற்றுக் காலம் முடிந்தும் பொய்த் தகவல் பெரும் பரவல் வேகம் மட்டும் குறையவே இல்லை.
பொய்த் தகவல் பெரும் பரவலில் Misinformation எனப்படும் தவறான தகவல் பரவல் வேகம் ஒப்பீட்டளவில் குறைவே காரணம், இத்தகைய தவறான தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்களாக இருக்கும். National Science Day 2025
உணர்வுப் பூர்வமான தகவல்களாக இருக்கும். வித்தியாசமான தகவல்களாக இருக்கும். கவர்ந்திழுக்கும் தகவல்களாக இருக்கும். இது நமக்கு பகிர்ந்து கொள்ள தூண்டும். இந்த தகவல்கள் தவறானது. ஆனால் தவறான நோக்கத்துடன் பரப்பப்படுபவை அல்ல. ஆனால், தவறான நோக்கத்துடன் இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து நிறைந்தது.
Disinformation என்பது அப்படியல்ல. தவறான நோக்கத்துடன் திட்டமிட்டு பரப்பப்படுவது. அது மதவாத அரசியல்வாத சாதிவாத நன்மைகளுக்கு பரப்புரை செய்யப்படும் விசமத் தனமான விசம் நிரம்பிய கருத்துக்கள். இவை தான் ஏராளமாக பரப்பப்படுகின்றன. ஒரு தகவல் பொய் என்று தெரிவதற்கு முன்பே தகவல் பரப்பியவரின் நோக்கம் நிறைவேறி விடுகிறது. National Science Day 2025
பெரும் சாதி மதக் கலவரங்கள் இப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இது உண்மையில்லை என்று தெரிவதற்கு முன்பே அந்தப் பொய்த் தகவலை உறுதுணையாக கொண்டு ஆட்சி அதிகாரத்தையே கைப்பற்றி விடுவார்கள். இது போன்ற பேராபத்துகளை எப்படி புரிந்து கொள்வது? எப்படி அறிந்து கொள்வது? எப்படி தடுத்து நிறுத்துவது? என்பதற்கான வழிமுறைகளை கண்டறியவே தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட வேண்டும்.
பருவநிலை மாற்றம் என்பது நம் புவிக் கோளத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் நெருக்கடி. இதனை எப்படி புரிந்து கொள்வது? எப்படி எதிர்கொள்வது? அமெரிக்க அதிபர் டிரம்ப் பருவநிலை மாற்றம் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து விட்டுப் போகட்டும். கேலி பேசட்டும்.
பருவநிலை மாற்றம் பற்றி பேசிக் கொண்டே நிலக்கரி பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட தொல் எச்ச எரிபொருட்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் மானியம் வழங்கிக் கொண்டே இருக்கட்டும். நாம் “மரம் நடுவோம். பிளாஸ்டிக் ஒழிப்போம்” அதன் வழியாக பருவநிலை மாற்றத்தை தடுத்து விடலாம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் மூடநம்பிக்கையை தகர்த்து எறிய தேசிய அறிவியல் தினம் போன்ற நாளை சிறப்பாக பயன்படுத்தப்பட வேண்டும். National Science Day 2025
பருவநிலை மாற்றத்தை தடுக்க இயற்கை வேளாண்மை ஓர் சிறந்த கருவி. அதனை புரிய வைக்க தேசிய அறிவியல் தினம் பயன்பட வேண்டும். சூரிய சக்திக்கும் மானியம் வழங்குவது நிலக்கரி உற்பத்திக்கும் மானியம் வழங்குவது. இந்த கபட நாடகம் அறிய தேசிய அறிவியல் தினம் பயன்பட வேண்டும். National Science Day 2025
ஒரு இந்தியக் குடிமகன் எந்தவித கெட்டப்பழக்கமும் இன்றி, உழைத்து உழைத்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்த செல்வம் ஒரு நோய் வந்தால் நொடிப் பொழுதில் கடனாளி ஆகி விடுகிறார். தனது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி தரவேண்டும் என்று தேடிச் சேர்த்த வருமானம் முழுவதையும் தனியார் கல்வி நல்லது என்று செலவிட்டு தானும் முன்னேற்றம் அடைய முடியவில்லை. பிள்ளையும் முன்னேற்றம் அடைய முடியவில்லை.
தரமான கல்வி, தரமான மருத்துவம் இரண்டும் ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்கள் உரிமை என்று தெரிந்து கொள்வது கூட தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களுக்கு காரணமாக அமைய வேண்டும். National Science Day 2025
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அறிவியலை மக்களுக்கு கொண்டு செல்லும் போது “விவசாயி கையில் இருக்கும் கலப்பையும் மண் வெட்டியும் போல அறிவியல் தொழில்நுட்பம் எளிய மக்களுக்காக பயன்பட வேண்டும்”என்று அறிவியல் தொழில்நுட்பத்தை பார்க்கவும் மக்களை பழக்கப்படுத்திட வேண்டும்.
பேராசிரியர் கா.பழனிதுரை அவர்கள் குறிப்பிடுவது போல குடிமக்கள் தயாரிப்பு என்பதும் ஓர் அறிவியல் பணி தான். எழுபத்து ஐந்து ஆண்டு சுதந்திர இந்தியாவில் குடிமக்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கு ஏற்ற ஆளுகை செய்வோரை எப்படி தேர்வு செய்வது என்பதற்குக் கூட எந்தப் பயிற்சியும் எந்த அமைப்பு மூலமும் தரவில்லையே.
பகுத்தறிவு என்பதைக் கூட கடவுள் மறுப்பு என்று பலர் புரிந்து வைத்துள்ளனர். இதனை அகற்றவும் அறிவியல் தினம் பயன்பட வேண்டும். அறிவியல் தினம் என்பது வெறும் கண்டுபிடிப்புகளுக்கான கொண்டாட்ட தினம் அல்ல. அலங்காரமான கொண்டாட்ட நாள் அல்ல. ஏன் எப்படி எதற்கு என்ற அறிவியல் மனப்பான்மை வழியாக எல்லாவற்றையும் பார்த்து மேலும் மேலும் அறிவை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டிய நாள்.
புதியனவற்றை புதுமைகளை தேடித் தேடி கற்க வேண்டிய நாள். தனிநபர்கள் எளிய பிரச்சினைகள் முதல் பருவநிலை மாற்றம் போன்ற உலகை அச்சுறுத்தி வரும் பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண குறியீடாக கொண்டாட வடிவமைக்கப்பட்ட நாள்.