பள்ளி, கல்லூரிகள் திறப்பால் உற்சாகம் முதல் நாள் வருகைப்பதிவு 60 சதவீதம்
தமிழகத்தில் ஐந்து மாதங்களுக்கு பின், பள்ளி, கல்லுாரிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ - மாணவியர் உற்சாகமாக வந்தனர். கல்லுாரிகளில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால், மார்ச் 20 முதல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தற்போது, கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், நேற்று முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு, மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்கின.நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி, மாணவ - மாணவியரை பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
நேற்று முதல் நாள் என்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே வந்தனர். பல மாவட்டங்களில், போதிய அளவு பஸ் வசதி இல்லாமல், மாணவ - மாணவியர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் முழு அளவில் பணிக்கு வந்ததாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கிராமத்து மாணவர்கள் கூட்டமாக, பள்ளிகளுக்கு வந்து சென்றனர். நகர பகுதிகளில் பெற்றோரே, பிள்ளைகளை, பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைத்து சென்றனர். தனியார் பள்ளி, கல்லுாரிகளின் கல்வி நிறுவன வாகனங்கள் இயக்கப்பட்டு, மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.முக கவசம் அணியாமல் வந்த மாணவர்களுக்கு, பள்ளி, கல்லுாரிகளில், அவை வழங்கப்பட்டன. தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே கல்லுாரிகளில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி போடாத மாணவர்கள், கல்லுாரிகளில் நடந்த சிறப்பு முகாம்களில், தடுப்பூசி போட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு செய்தார். வகுப்புகளுக்கும், ஆய்வகங்களுக்கும் சென்று மாணவர்களுக்கான வசதிகளை கேட்டறிந்தார்.அங்கிருந்த மாணவர்கள், 'நாங்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டு விட்டோம்; விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்குகிறோம்' என்றனர்.மேலும், அங்குள்ள மருத்துவ மையத்துக்கு சென்று, தடுப்பூசி முகாமின் செயல்பாட்டை ஆய்வு செய்தார். உயர் கல்வி செயலர் கார்த்திகேயன், பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், மருத்துவ மைய இயக்குனர் கணேசன் உடனிருந்தனர்.பின், பொன்முடி அளித்த பேட்டி:இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் நேரடி வகுப்பு நடத்தப்படுகிறது. தடுப்பூசி போடாத மாணவர்களை, கல்லுாரி மற்றும் விடுதிக்குள் அனுமதிக்க வேண்டாம்.
அனைத்து மாணவர்களின் நலனுக்காக, ஒவ்வொரு மாணவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இதற்காக கல்லுாரிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதால், மாணவர்கள் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பேராசிரியர்கள் மற்றும் கல்லுாரி பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என உத்தரவிட்டதால், அனைவரும் தடுப்பூசி போட்டு விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.-
பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்ட நிலையில், மாலையில் வகுப்பு முடிந்து வந்த மாணவர்கள் கூறுகையில், 'ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும், பள்ளிகளில் நேரடியாக வந்து வகுப்புகளில் பங்கேற்பதும், ஆசிரியர்கள், சக மாணவர்களை நேரில் சந்திப்பதும் உற்சாகமாக உள்ளது' என்றனர்.'மாணவர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் உரையாடி, வகுப்புகள் நடத்துவது, கற்பிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது' என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.