நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது மூன்று மாணவர்கள் முழு மதிப்பெண்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. மூன்று மாணவர்கள் 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்., 12ல் நடந்தது. நாடு முழுதும் 16 லட்சம் மாணவ - மாணவியர் இந்த தேர்வை எழுதினர். தமிழகத்தில் இருந்து 1.10 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான கேள்வி மற்றும் விடைத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி முடிக்கும் வரை, நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கும்படி மனுவில் கோரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது
இந்நிலையில், 'இரண்டு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முடியாது' என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும்படி சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. மாணவர்களின் 'இ - மெயில்' முகவரிக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
'தேசிய தேர்வு முகமையின் neet.nta.nic.in என்ற இணையதளத்திலும் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த மிருணாள் குட்டேரி, டில்லியின் தன்மய் குப்தா, மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த கார்த்திகா ஜி.நாயர் ஆகியோர், 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட 15 மாணவர்களின் முடிவுகள் ரத்து செய்யப்பட்டன.