பள்ளிகள் வழியாக குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு குறைவு
பள்ளிகள் வழியே குழந்தைகளுக்கு கொரோனா கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு குறைவு என்று உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்
சென்னை தரமணியில் உள்ள வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் சார்பில், ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டம், 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் உள்ளது.நடப்பு கல்வி ஆண்டில்,இந்த திட்டத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டி:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் தொற்று பரவல்என்பது, 1 சதவீதம் மட்டுமே உள்ளது. மெகா தடுப்பூசிமுகாமால், தடுப்பூசி போட்டு கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் இரண்டு, 'டோஸ்' தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிடித்தால், மூன்றாம் அலையை முழுமையாக தடுக்க முடியும்.
தற்போதைய நிலையில், பைசர் பயோடெக், மாடர்னா என்ற இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடலாம். ஏற்கனவே நுரையீரல், இதய நோய் மற்றும் கேன்சர் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடலாம். மற்ற நல்ல நிலையில் உள்ள குழந்தைகளுக்கு, தற்போது முன்னுரிமை அளிக்க தேவையில்லை.
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை, குழந்தைகளுக்கு செலுத்துவது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. முடிவுகள் அடிப்படையில், தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்கும்.பள்ளி குழந்தைகளில் பலருக்கு, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில், 40 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு ஆன்லைன் கல்வியே கிடைக்கவில்லை. நீலகிரி மற்றும் கொல்லிமலை உள்ளிட்ட பழங்குடியின பகுதிகளில், 'நெட்வொர்க்' பிரச்னையால், ஆன்லைன் வகுப்புகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.
எனவே, பொருளாதாரத்திலும், கட்டமைப்பிலும் பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு, பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது அவசியம். நேரடி வகுப்பு துவங்கினால் மட்டுமே, அனைத்து வகை குழந்தைகளுக்கும் கல்வி கொடுக்க முடியும்.எதிர்ப்பு சக்தி அதிகம்பெரியவர்களுக்கு ஏற்ப குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. பள்ளிகளில் தொற்று பரவி விடக்கூடாது என்று, பள்ளிகளை மூடி வைத்தோம். ஆனால், பள்ளிகளை தவிர மற்ற எல்லாம் திறக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.
குழந்தைகள் வணிக வளாகங்களுக்கு செல்கின்றனர். பெற்றோருடன் வெளியில் செல்கின்றனர். ஒன்றாக கூடி வெளியே விளையாடுகின்றனர். சமூக ரீதியாக குழந்தைகள் அனைவருடனும் இணைந்து உள்ளனர்.எனவே, பள்ளிகள் வாயிலாக குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதையே, யுனிசெப், உலக சுகாதார அமைப்பு போன்றவையும் வலியுறுத்தி கூறியுள்ளன.இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் கூறினார்.-
விழாவில் பங்கேற்ற, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டத்தை, மாவட்டந்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தின் வழியே, தனியார் நிறுவனங்கள், மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி அளிப்பது பாராட்டத்தக்கது.
கொரோனா தொற்றை காட்டிலும், மாணவர்களுக்கு கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பு குறித்து, பல்வேறு தரப்பிலும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. கல்வி அதிகாரிகளிடமும்ஆலோசனை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசின் அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பும் இடம் பெறும். பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் ஆலோசித்து உரிய அறிவிப்பை வெளியிடுவார். பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயமாக வரவேண்டிய அவசியமில்லை, விருப்பமுள்ளோர் பள்ளிகளுக்கு செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.