2025-26ம் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்க இன்று(02-01-2025) முதல் விண்ணப்பிக்கலாம்
வரும் 2025-26ம் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் இன்று (02/01/2025) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பி.விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-2026-ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள் (ஐடிஐ) தொடங்குதல், அங்கீகாரத்தை புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு 02/01/2025 ம் தேதி முதல் ஆன்லைனில் (www.skilltraining.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.
2025-2026-ம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5,000. ஆய்வு கட்டணம் ரூ.8,000. இக்கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 28/02/2025ம் தேதி ஆகும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகளை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் 044-22501006 (113) என்ற தொலைபேசி எண்ணிலும் detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொண்டு விவரம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.