உயர் கல்வியில் இனி இருமுறை மாணவர் சேர்க்கை
இனி உயர் கல்வியில் இரு முறை மாணவர் சேர்க்கை, எப்போது வேண்டுமானாலும் துறை மாறலாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கையில் இனி பின்பற்றப்படும் நடைமுறைக்கான வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு (UGC) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இந்த முறையை பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைப்படி இனி ஆண்டிற்கு இரு முறை மாணவர் சேர்க்கை இளநிலை மற்றும் முதுகலை வகுப்புகளில் மேற்கொள்ளப்படும். அதன்படி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பில் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்தாலும் மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். அதற்கேற்ற வகையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
பட்டப்படிப்பில் பயில்கின்ற போது எந்த ஆண்டில் வேண்டுமானாலும் சேரலாம் என்றும் அதேபோல் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான “multiple entry and exit” முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும் முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் இளநிலை, முதுகலை படிப்புகளை ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது