புதியதாக தேசிய விளையாட்டு அறிவியல் ஆராய்ச்சி மையம்!!!
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நம் வீரர்கள் பதக்கம் வாங்கி குவித்ததை அடுத்து, 250 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தை திறக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை நம் விளையாட்டு வீரர்கள் வென்றனர். மாற்று திறனாளிகளுக்கான போட்டிகளில் 5 தங்கம் உட்பட 19 பதக்கங்களை நம் வீரர்கள் வென்றனர். அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டி ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 2024ல் நடக்கிறது.அதில் நம் வீரர்கள் மிக சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதிக பதக்கங்களை குவிக்க வேண்டும் என்பதற்காக, நவீன பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு திறக்க உள்ளது.
இந்த மையம், என்.சி.எஸ்.எஸ்.ஆர்., எனப்படும் விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் என அழைக்கப்பட உள்ளது. இதற்காக 250 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.உலகம் முழுதும் உள்ள, விளையாட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்களின் பாட திட்டங்கள் மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 2.5 கோடி ரூபாய் செலவில் ஆலோசகரை அரசு நியமித்துள்ளது.
இந்த விளையாட்டு மையத்தில் வீரர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தொடர் வெற்றிகளை குவிப்பது, உணவுப் பழக்கங்கள், மன உறுதி உள்ளிட்டவைகள் குறித்தும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சிறந்த பயிற்சியாளர்களும் உருவாக்கப்படுவர்.மேலும் விளையாட்டு அறிவியல் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் இந்த மையத்தில் நடக்கும். இந்த மையத்தை நடத்த தகுதியுள்ள சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிக்கு சமீபத்தில் அழைப்பு விடப்பட்டுள்ளது.