அண்ணா பல்கலைக் கழகத்தின் அறிவு பலமூட்டும் ஒப்பந்தம்!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடனும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடனும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி அண்ணா பல்கலையில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் ஒரு செமஸ்டர் மருத்துவக் கல்லூரியில் படிக்கவிருக்கிறார்கள்.
அதேபோன்று சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள் ஒரு செமஸ்டர் வேளாண் பல்கலையில் படிக்கவிருக்கிறார்கள். அடுத்த கல்வியாண்டிலிருந்து இது நடைமுறைக்கு வரவுள்ளது. ஏற்கெனவே சர்வதேச கல்வி நிறுவனங்கள் முன்னெடுத்துவரும் அதிசிறந்த திட்டம் இது. இதன்மூலம் பொறியியல் துறை சார்ந்த மாணவர் களுக்கு மருத்துவத்திலும், விவசாயத்திலும் அறிவு வளம் பெருகும்.
ஒரு துறைசார்ந்த ஆழ்ந்த ஞானம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அதனுடன் தொடர்புடைய பிற துறைகள் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதும் அவசியம். உதாரணத்துக்கு ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர் தான் வடிவமைக்கும் எந்திரம் பெருநிறுவனங்களுக்கு மட்டுமல்லாது சாமானியர்களுக்கும் எப்படியெல்லாம் பயனளிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
அத்தகைய சமூக அக்கறை அந்த மாணவனுக்குள் ஊற்றெடுக்க அவருக்கு பிற துறைகளையும் கல்விக்கூடங்கள் அறிமுகம் செய்துவைக்க வேண்டும். அப்போதுதான் எதிரிகளை அடையாளம் காண மட்டுமல்ல விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்துச் செழிப்பான விளைச்சல் காணவும் ட்ரோன்களை பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் அவர் மனதில் உதிக்கும். இந்த மகத்தான சிந்தனைக்கு செயல்வடிவம் அளித்திருக்கும் நாட்டின் உயரிய பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான தமிழகத்தின் அண்ணா பல்கலை பாராட்டுக்குரியது. பல்துறை கல்விப்புலம் குறித்த அறிவும் உணர்வும் மிகுந்த பேராசிரியர்களை ஆராய்ச்சி மையங்களில் பணியமர்த்தவிருப்பதாகவும் அண்ணா பல்கலை அறிவித்திருப்பது கூடுதல் நம்பிக்கை ஊட்டுகிறது.