மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும் உயர் நீதிமன்றம்
மாணவர்களின் நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சென்னையைச் சேர்ந்த அறம் அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக அரசு 2021 ஆகஸ்ட் 21ல் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அரசு துறைகள் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தடுப்பூசி செலுத்தும்படி நிர்ப்பந்திக்கின்றனர். தடுப்பூசி செலுத்தினால், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவோம் என, அரசால் கூட எந்த உத்தரவாதமும் அளிக்க முடியவில்லை.தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், தவிர்த்துக் கொள்வதும் மக்களின் விருப்பம் என்று விட்டு விட வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், பாரம்பரிய மருந்துகளால் குணமடைந்துள்ளனர். எனவே, தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. இது குறித்து அரசுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:பள்ளிக்கு வர வேண்டும் என்றால், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்களின் நலன், பாதுகாப்பு கருதப்பட வேண்டும். சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள், மற்றவர்களின் நலன் கருதி வீட்டில் இருப்பது சிறந்தது.
தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழப்புகள் ஏராளம். உலக சுகாதார அமைப்பு, இரண்டு தடுப்பூசிகளையும் அங்கீகரித்து உள்ளது. இந்த அமைப்பு, நிபுணர்களை கொண்டது; குறைத்து மதிப்பிட முடியாது.மருத்துவ ஆராய்ச்சியில், புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வருகின்றன.
தடுப்பூசிகளுக்கு மாற்று, நாளை கூட வரலாம். பணிகள் தொடர்பான வழக்கு, பொது நல வழக்காக வராது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை ஏற்க முடியாது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.வழக்கை வாபஸ் பெற அனுமதிப்பதாகவும் முதல் பெஞ்ச் தெரிவித்தது. இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதை தொடர்ந்து, தள்ளுபடி செய்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது