எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பா? 14ம் தேதி முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டம்
தமிழகத்தில், 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் பள்ளி கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் வரும், 14ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, செப்டம்பர் 1ல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கின்றன.வரும், 15ம் தேதிக்கு பின், எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்தலாமா என, தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து, தமிழக தலைமை செயலர் இறையன்பு தலைமையில், நேற்று பல்வேறு துறை செயலர்கள் தலைமையில், ஆலோசனை நடந்தது.இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், வரும், 14ம் தேதி சென்னையில் நடத்தப்படும் என, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி கல்வியின் பல்வேறு இயக்குனரக பணிகள் குறித்து, தனித்தனியாக பட்டியலிட்டு, இதற்கான விபரங்களுடன் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணயம், அங்கீகாரம் நீட்டிப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் தனிப்பிரிவில் பெறப்பட்ட மனுக்களுக்கான தீர்வு, அங்கீகாரம் இல்லாத பள்ளி விபரம், பாலியல் பிரச்னைகளை தீர்க்க கமிட்டி அமைத்தல், ஆசிரியர்களுக்கு பயிற்சி ஆகியவை குறித்து, கூட்டத்தில் பேசப்பட உள்ளது.
பிரதமர் மற்றும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கான தீர்வுகள் மற்றும் நிலுவையில் மனுக்களின் விபரம் தாக்கல் செய்ய, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவுக்கு ஏற்ப தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும், கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.