நீட் விலக்கு விவகாரத்தில் மாணவர் கருத்து கேட்க கோரிக்கை
நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவை ஆய்வு செய்யும் முன், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமும் அரசு கருத்து கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆனால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு, தனியார் பயிற்சி மையங்களில், சிறப்பு பயிற்சி பெற வேண்டி உள்ளது.
எனவே, நீட் தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டசபையில் மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத் தர, கவர்னருக்கு மசோதா அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை, ஐந்து மாதங்களுக்கு பின், தமிழக அரசுக்கே கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, நீட் மசோதா விவகாரம் குறித்து, இன்று தமிழக சட்டசபை கட்சி தலைவர்களின் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இதில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் ஒரு தரப்பு மாணவர்கள், தேர்வு வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். அவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, எளிதாக மருத்துவ படிப்பில் சேர முடியும் என்று நம்புகின்றனர்.
எனவே, நீட் தேர்வு விலக்கு குறித்து அடுத்த நடவடிக்கை எடுக்கும் முன், தமிழகத்தில் உள்ள பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மற்றும் நீட் எழுதி, அதன் வழியே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கருத்துகளையும் அரசு கேட்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது