உயர்கல்வி பயில பிரதமரின் வித்யாலட்சுமி கல்வி கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கத் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வகை செய்யும் ‘பிரதமரின் வித்யாலட்சுமி’ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து 22 லட்சம் மாணவர்கள்வரை பிணையம் இல்லாத கடன் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையான, மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடைமுறைகளின் மூலம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு 2024 முதல் 2031 நிதியாண்டுவரை ரூ.3, 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அனைத்து மாவட்டம்தோறும் இத்திட்டத்தின் பயன்களை எடுத்துரைத்தால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயனடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில், பிரதமரின் வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள்
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - இந்தியாவில் தொழில்நுட்ப, தொழில்முறை கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 860 நிறுவனங்கள் தகுதி வாய்ந்த உயர்கல்வி (கியூஎச்இஐ) நிறுவனங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை www.nirfindia.org/Rankings/2024/OverallRanking.html பட்டியல் மூலம் இந்நிறுவனங்களை அறிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் தமிழ்நாடு உள்பட்ட நாட்டின் பல மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. கியூஎச்இஐ நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள் பிரதமரின் வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டத்துக்கு முதல் கட்டமாக தகுதி பெறுகிறார்கள்.