அனைத்து வகைக் கல்லூரிகளிலும் நேரடியாக மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் உயர் கல்வித்துறை திட்டவட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டன. தொற்று குறைந்தபிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
தற்போது வடகிழக்குப் பருவ மழை காரணமாகவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து வகை செமஸ்டர் தேர்வுகளும் நேரடியாக மட்டுமே நடைபெற வேண்டும். இந்தத் தேர்வுகள் அனைத்தும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி, நடத்தப்பட வேண்டும்.
இந்த உத்தரவு அனைத்து வகை பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகளுக்குப் பொருந்தும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது