அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பலமுறை பேசியும் பலன் இல்லாததால், அறிவித்தபடி ஜனவரி 6 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்து, ஐந்து ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் பேச, கடந்த பிப்ரவரி மாதம், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட போவதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அறிவித்தன.
அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் நேற்று தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன் மீண்டும் பேச்சு நடத்தினர்.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு, தலைமை செயலக ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி உட்பட, அரசால்அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மட்டுமின்றி, பல்வேறு போட்டி சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதனால், அரங்கில் கூட்டம் அலைமோதியது. பேச்சில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என, அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இயக்கங்களை, பேச்சுக்கு அழைத்த அமைச்சர்கள் குழுவினர், 'உங்கள் கோரிக்கைகளை சொல்லுங்கள்' என, கருத்து கேட்பு கூட்டமாக நடத்தினர்; இதை கண்டிக்கிறோம்.
'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், பேச்சுக்கு அழைத்து, மீண்டும் முதலில் இருந்து, 'கோரிக்கைகளை சொல்லுங்கள், முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறோம்' என்று கூறுவதை கண்டிக்கிறோம்.