ஏப்ரல் மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை
நடப்பு கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை, ஏப்ரல் இறுதியில் நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியுள்ள பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அடுத்தகட்டமாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் தேர்வு அட்டவணை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றால், 2019- - 20ம் கல்வி ஆண்டில், 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தன. 10ம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இன்றி, 'ஆல் பாஸ்' என அறிவிக்கப்பட்டது.
அடுத்த 2020- - 21ம் கல்வி ஆண்டிலும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக, 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும், தேர்வுகள் இன்றி ஆல் பாஸ் என தேர்ச்சி வழங்கப்பட்டது.நடப்பு கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1 முதலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 1 முதலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்தன. பின், 'ஒமைக்ரான்' தொற்று பரவலால், ஜனவரி முழுதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் இந்த மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் ஓரளவு முடிக்கப்பட்டு உள்ளதால், முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நேற்று முன்தினம் துவங்கின.இந்த தேர்வுகள், முதல் முறையாக அரசு தேர்வுத் துறையின் பொதுவான வினாத்தாள் வழியே, பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் பிப்ரவரி 17ல் முடிகின்றன.இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ல் துவங்க உள்ளது. இதுவும் பொதுத் தேர்வு போல ஏப்ரல் 5 வரை நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே பொதுத் தேர்வு போல இரண்டு திருப்புதல் தேர்வுகளை நடத்துவதால், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் முழுமையாக தயாராக வாய்ப்புள்ளது. எனவே, ஏப்ரல் இறுதி வாரத்தில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொதுத் தேர்வை ஏப்ரல் 25ல் துவங்கினால், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் இடைவெளியின்றி தொடர்ச்சியாக தேர்வை முடிக்க ஆலோசிக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு நடத்துவதால், பொதுத் தேர்வு குறித்த அழுத்தம், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நீண்ட நாட்கள் நீடிக்காமல் குறைக்க முடியும் என உளவியலாளர்களின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.
மேலும், மே 1ல் மே தினம்; மே 2 அல்லது 3ல் ரம்ஜான் பண்டிகை விடுமுறை நாட்கள் என்பதால், அதற்கு முன் தேர்வை முடித்துவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாற்றம் ஏற்பட்டால், ஏப்ரலில் தேர்வை துவங்கி, ரம்ஜான் விடுமுறைக்கு பின், மே முதல் வாரத்தில் தேர்வை முடிக்கும் வகையிலும், மற்றொரு அட்டவணையையும் அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.இது குறித்து, முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சருடன், பள்ளிக் கல்வித் துறை, தேர்வு துறை அதிகாரிகள் ஆலோசித்து, தேர்வு அட்டவணையை விரைவில் அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வான இரண்டாம் கட்ட பருவத் தேர்வு, ஏப்., 26ல் துவங்கி, மே முதல் வாரம் முடிந்து விடும். இதனால், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு சி.பி.எஸ்.இ., மாணவர்கள், மே மாதம் தயாராக வாய்ப்புள்ளது.அவர்களை போல, தமிழக மாணவர்களும் நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகவும், ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை மே மாதம் கிடைக்கும் வகையிலும், ஏப்ரலில் பொதுத் தேர்வை முடிக்கவும் பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாமல், 'ஆல் பாஸ்' பெற்று வந்துள்ளனர். அவர்கள் பொதுத் தேர்வே இல்லாமல் 12ம் வகுப்புக்கு வந்தால், அடிப்படை பாடங்களை படிக்காமல் பொதுத் தேர்வை எழுத திணறுவர் என, கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். எனவே, 11ம் வகுப்பு பொதுத் தேர்வை எப்படியாவது நடத்த ஆலோசனை நடந்துள்ளது. முதலில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவில் உற்சாகமூட்டும் தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டு, அதன்பின் பொதுத் தேர்வு குறித்து முடிவு செய்யவும் கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.