மழை பெய்தாலே பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? கேரளாவில் இப்படியில்லை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆதங்கம்
மழை தொடர்பான எச்சரிக்கை செய்திகள் தொலைக்காட்சியில் வந்தாலே போதும் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்கள் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை உண்டா? என கேட்பதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மழை பெய்து விட்டாலே போதும் இன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை விடுவாங்களா? என்ற எதிர்பார்ப்பு இன்றைய தலைமுறை மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. வெளியில் லேசாக வானம் இருட்டி விட்டாலே போதும்.. மழை பெய்யுமா என வானத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதோடு அவ்வப்போது தொலைக்காட்சி முன் உட்கார்ந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக ஏதாவது ஒரு அறிவிப்பு வந்து இருக்குதா என்று மாணவர்கள் பார்ப்பதை காண முடிகிறது.
ஏன் இன்னும் சில மாணவ செல்வங்களோ மழை பெய்தால் வீட்டு பாடம் கூட செய்ய தேவையில்லை என மழை எப்படியாவது பெய்ய வேண்டும் என பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இன்னும் சில மாணவர்களே சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியரின் கணக்கிற்கே போய், மழை பெய்து கொண்டு இருக்கிறது எப்படியாவது விடுமுறை விடுங்கள் என குறுஞ்செய்தியில் கோரிக்கை வைக்கிறார்கள்.
பெற்றோர்கள் கூட பள்ளிக்கு விடுமுறை எதுவும் விடப்படுமா? என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கே போன் செய்து கேட்டு விடுவதை காண முடிகிறது. இந்த நிலையில், மழை தொடர்பான எச்சரிக்கை செய்திகள் டிவியில் வந்தாலே போதும் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்கள் எனக்கு போன் செய்து இன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை உண்டா? என கேட்பதாக தஞ்சாவூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:- மழை தொடர்பான செய்திகள் டிவியில் வந்தாலோ.. சிறிய தூறல் அளவிலான மழை பெய்தாலோ மாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக எனக்கு போன் செய்து, இன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை உண்டா? என்று கேட்கிறார்கள். மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்?.. நான் கேரளா மாநிலத்தை சேர்ந்தவன். கேரளாவில் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதலே மழை தொடங்கிவிடும்.
அப்போது நான் மழையில் நனைந்தபடியே தான் பள்ளிக்கு செல்வேன். அந்த நேரத்தில் மழை பெய்கிறது என்று நினைத்து நான் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருந்தால் இன்று உங்கள் முன்பு ஒரு மாவட்ட ஆட்சியராக நின்றிருக்க முடியுமா. எனவே தயவு கூர்ந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.. வாழ்க்கையில் கல்வி மட்டுமே மற்றவர்களால் திருட முடியாத சொத்தாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.