பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதும்
நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதுமானது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை பள்ளி மாணவர்கள் தங்களது பழைய பஸ் பாஸ் மூலமே அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிக்கு சென்று கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக தான் அரசு சார்பில் மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவச சீருடை, இலவச சைக்கிள், நோட்டு புத்தகங்கள், என அரசு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கினாலும் அவற்றில் பிரதானமானது அரசுப் பேருந்துகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயணம். அரசுப் பேருந்துகளில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் 1997-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்டது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது போல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 50% கட்டணச் சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் மாணவர்கள் அரசின் இலவச பஸ் பாஸ் மூலம் பயன்பெறுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் இருந்தே பாடம் படித்து வந்த மாணவர்கள் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் முழுமையாக பள்ளிக்குச் செல்லவுள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்துத்துறை சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வர இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்பதால் அதுவரை பழைய பஸ் பாஸை காட்டி மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது. முன்பு காகித அட்டையில் வழங்கப்பட்டு வந்த இலவச பஸ் பாஸ் இப்போது ஸ்மார்டு கார்டு வடிவில் கொடுக்கப்படுகிறது.
இதனிடையே மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்டு நடத்துநர்கள் கடிந்துகொள்ளாத வகையில், இது தொடர்பான ஒரு சுற்றறிக்கையை போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கும் போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.