பொறியியால் கலந்தாய்வு 2ஆம் சுற்றில் கடும் போட்டி இருக்கலாம்
மாணவர்கள் படிப்பு மற்றும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கையில் குறைந்தபட்சம் 150 முதல் 200 விருப்பங்களை வைத்திருக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் 1.4 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நான்கு சுற்று கலந்தாயவில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
200 முதல் 186 வரை கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், முதல் சுற்றில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
TNEA முதல் சுற்று கலந்தாயவில் பங்கேற்ற மாணவர்களுக்கான தற்காலிக இட ஒதுக்கீட்டை வெளியிட்டது. அதை பார்க்கையில், இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் படிப்பு மற்றும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கையில் குறைந்தபட்சம் 150 முதல் 200 விருப்பங்களை வைத்திருக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இரண்டாம் கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் சுற்றில் 14,788 மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், இரண்டாம் சுற்றில் அதை விட டபுள் மடங்கு மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கொரோனாவால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, முந்தைய தேர்வுகளில் குறிப்பிட்ட சில பாடங்களில் எடுத்த மார்க் அடிப்படையில் சில விதிமுறைகளின்படி மார்க் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அதிகளவிலான மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். எனவே, விருப்ப படிப்பு மற்றும் கல்லூரி பட்டியல் இல்லாமல் கவுன்சிலிங் சென்றால், ஆசைப்பட்ட கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், இந்தாண்டு கல்லூரியை தேர்வு செய்வதிலும் மாணவர்களுக்கு நிச்சயம் குழப்பம் ஏற்படும். ஏனென்றால் கடந்தாண்டு, ஆன்லைனில் போதிய கண்காணிப்பு இன்றி தேர்வு நடைபெற்றதால், மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதால் கல்லூரியின் தேர்ச்சி சதவிகிதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால், எந்த கல்லூரியை தேர்வு செய்வது ஒன்று மாணவர்களுக்கு கடினமான விஷயமாக மாறிவிட்டது.