நாங்கள் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் இல்லை அரசு பள்ளி ஆசிரியர்கள் வேதனை
மாணவர்களின் ஜாதி; மாணவியரின் மாத விடாய் பிரச்னை குறித்த விபரம் சேகரிப்பு போன்ற உத்தரவுகளால், அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். '
ஆசிரியர்கள் என்ன டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களா' என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து, தொடக்க பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான,'ஐபெட்டோ'வின் அகில இந்திய செயலர் அண்ணாமலை, நேற்று வெளியிட்ட அறிக்கை:பள்ளிக்கல்வி துறையின் சமீபத்திய நெருக்கடியான நடவடிக்கைகளால், 90 சதவீதம் ஆசிரியைகள், தங்கள் வேதனைகளை வெளிக்காட்ட முடியாமல் உள்ளனர். இதை, முதல்வர் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பருவ வயதை எட்டிய பள்ளி மாணவியரிடம், இயற்கை பாதிப்பு தன்மையை கேட்டறிய சொல்கின்றனர். இந்த பிரச்னைகளை, தாயிடம் கூட சொல்வதற்கு கூச்சப்படும் மாணவியர் பலர் உள்ளனர். இந்தப் பிரச்னைகளில், எங்கள் தலையில் நாங்களே குட்டி கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. பள்ளிக்கல்வி துறையால் ஆசிரியர் சமுதாயம் நாள்தோறும் சேதாரப்படுவதை தாங்க முடியவில்லை.தினமும், ஏராளமான புள்ளி விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுமாம். அவை யாருக்கு தேவைப்படுகின்றன. இது, பள்ளிக்கல்வி துறையா அல்லது புள்ளிவிபர துறையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது
.கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடியாக பாடம் நடக்கவில்லை. தற்போது மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து விட்ட நிலையில், கிடைக்கும் நாட்களிலாவது, மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும் வகையில், பாடம் நடத்த அனுமதியுங்கள்.அதை விடுத்து, ஆசிரியர்களை, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக பயன்படுத்தாதீர். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை முன்னேற்றும் வகையில், அவர்களுக்கு பாடம் நடத்த அனுமதியுங்கள்; நேரம் கொடுங்கள். புள்ளி விபர பணிகளை கைவிடுங்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்