மாணவர்கள் ஆன்லைன் அல்லது நேரடியாக எழுதுவதை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தர கோரிக்கை
ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் பீதி உள்ளதால், பொதுத் தேர்வுகளை ஆன்லைன் அல்லது நேரடியாக எழுதுவதை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தர வேண்டும்' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, பெற்றோர் கடிதம் எழுதி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் குறைந்து, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல பகுதி களைச் சேர்ந்த, 8,000க்கும் மேற்பட்ட பெற்றோர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: பெரும்பாலான மாணவர்களுக்கு தடுப்பூசி இன்னும் வழங்கப்படவில்லை.வழங்கப்பட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில், 3 - 4 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, ஒமைக்ரான் வைரஸ் பரவல் பல நாடுகளில் உள்ளது.அதனால், பயணக் கட்டுப்பாடுகளை நம் நாடும் அறிவித்துள்ளது.தற்போதைய மாணவர்களில் பெரும்பாலானோர், ஆன்லைன் வாயிலாகவே கல்வி கற்றுள்ளனர். அதனால், ஆன்லைன் வாயிலாகவே தேர்வுகள் நடத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.
தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில், நேரடியாக தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அச்சம் உள்ளது.விருப்பமுள்ளவர்கள், பெற்றோரின் அனுமதியோடு பள்ளிக்கு வரலாம் என, மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.அது சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கும் பொருந்தும். அதனால், ஹைபிரிட் முறையில் தேர்வு நடத்தும்படி, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.