தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் கல்வித்துறைக்கு அறிவித்த முக்கியமான அறிவிப்புகள்
அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டடங்கள் சுட்டிடவும் 7,000 கோடி ரூபாய் செலவில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை' அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில், 2,000 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள். கழிப்பறைகள் என மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டமானது 2025ம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும் எண்கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் வரும் நிதியாண்டில் 110 கோடி ரூபாய் செலவில் நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 கோடி ரூபாய் நிதியுடன் புத்தகக்கண்காட்சிகள் , இலக்கிய திருவிழாக்கள் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெற வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பயன்களும் பாதுகாக்கப்படும்
தரவுகள் அடிப்படையிலான ஆளுகை மூலம், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளைக் களைய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் உள்ள தேவையற்ற தாமதங்களைக் குறைக்கவும், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையில், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யப்படும் வகையில் ஒருங்கிணைந்த உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.
மதுரையில் அமைக்கப்பட்டு வரும் நூலகத்தில் குழந்தைகளுக்கான நூலகச்சூழல்,போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இணையவசதியுடன் கூடிய சிறப்புப் பிரிவு,பார்வைத் திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள், கலை அரங்கம், குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்குகள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படைப்புகள் உள்ளிட்டவையோடு இந்த நூலகம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த நூலகத்தில் அனைத்து துறைகளையும் சேர்ந்த 3 லச்சத்து ஐம்பதாயிரம் நூல்கள் இடம் பெற போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மொத்த உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதிகளை வழங்கவும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் அம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
வரும் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக 305 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 1,48,315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனை கருத்தில்கொண்டு வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அதற்காக வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.