மீண்டும் எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வா?- சர்ச்சையை அடுத்து கல்வித்துறை விளக்கம்
எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுவது குறித்த அறிவுறுத்தல்களோடு வெளியான சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து பொதுத் தேர்வு நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
மீண்டும் சில நாட்களிலேயே 5, 8-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
இதற்கு கல்வியாளர்களும் பெற்றோர்களும் கடும் எதிர்வினைகளை ஆற்றினர். இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான அரசாணையும் வெளியானது.
இதற்கிடையே, எட்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு என்று குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கை வெளியானது. அதில், பொதுத் தேர்வு 02.04.2020 முதல் 09.04.2020 வரை நடைபெற உள்ளதாகவும் அதுதொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தேர்வு மையக் கண்காணிப்பாளர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. இதுதொடர்பான ஹேஷ்டேகுகள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் இதுதொடர்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என்பது சுற்றறிக்கையில் தவறுதலாக பொதுத்தேர்வு எனக் குறிப்பிடப்பட்டு விட்டதாகவும், அதுவே குழப்பத்திற்குக் காரணம் எனவும், தவறு சரிசெய்யப்பட்டு இன்று (05/03/20) புதிய சுற்றறிக்கை அனுப்பப்படும் எனத் தெரிவித்ததுடன், ஏற்கனவே அறிவித்தபடி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதில் மாற்றம் ஏதுமில்லை எனவும் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.