சாதி, மாதவிடாய் குறித்த விபரங்கள் கேட்கப்படாது, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மாணவ - மாணவியரை சங்கடப்படுத்தும் வகையிலான, மாதவிடாய் மற்றும் சாதி விபரம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படாது' என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரிடம், நுாற்றுக்கணக்கான கேள்விகளை பெற்று, அதை, எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதில், மாணவ - மாணவியரின் ஜாதி வாரியான விபரம், மாணவியரிடம் மாதவிடாய் மற்றும் உதிரப்போக்கு தொடர்பான கேள்வியும் இடம் பெற்றது. பள்ளிக்கல்வியின் இந்த நடவடிக்கை, பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பெற்றோர், ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவ -மாணவியரை சங்கடப்படுத்தும் தகவல்கள், பள்ளிக் கல்வித் துறையில் இருந்து மாணவர்களிடம் சேகரிக்கப்படாது; அவை தவிர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
பள்ளியில் சேர்ந்த பின் சாதி விபரங்களை மாணவர்கள் கூற வேண்டிய கட்டாயமில்லை; மாணவியரும் தங்கள் உடல்நலன் குறித்த விபரங்கள் மற்றும் அசவுகரியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.