புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு செயல் வடிவம் கொடுக்கத்துவங்கியுள்ளது
அரசியல் ரீதியாக புதிய கல்விக் கொள்கையை தி.மு.க., எதிர்த்தாலும், தற்போது உண்மையை புரிந்து, அதை அமல்படுத்த துவங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் அனைத்து தரப்பு மக்களுக்கும், எவ்வித பாகுபாடுமின்றி கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. சிறந்த கல்வியாளர்கள், நிபுணர்களை இணைத்து, மக்களிடமும், மாநிலங்களிடமும் கருத்து கேட்டு, அதன்படி இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டு, அமலுக்கும் வந்துள்ளது.
ஆனால், 'குலக் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம். ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டம்' எனக் கூறி, அரசியல் ரீதியாக தி.மு.க., எதிர்த்து வந்தது. கல்வியாளர்கள் ஆட்சிக்கு வந்த பின், புதிய கல்விக் கொள்கையின் மகத்துவம் தி.மு.க.,வுக்கு புரிய துவங்கி விட்டதாக, கல்வியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான, தன்னார்வலர்களை வைத்து கல்வி கற்பிக்கும் திட்டத்தை, இல்லம் தேடி கல்வி என்ற பெயரில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமே, புதிய கல்விக் கொள்கைக்கு கிடைத்த முதல் வெற்றி என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.மாணவர் இடைநிற்றலை குறைத்து, அனைத்து வழிகளிலும் கல்வியை வழங்குதல் குறித்து, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பல்வேறு தன்னார்வ நிறுவனத்தினர் ஆகியோரை, பள்ளி செயல்பாடுகளுடன் இணைப்பது முக்கிய பணி என்றும் கூறப்பட்டு உள்ளது.இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறையின், மத்திய நிதியுதவியிலான சமக்ர சிக் ஷா திட்டப் பணிகளை, தன்னார்வ நிறுவனங்கள், பல்வேறு தனியார் அமைப்புகளை வைத்து செயல்படுத்த துவங்கி உள்ளனர்.இதற்காக, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சமக்ர சிக் ஷா கட்டடத்தின் மூன்றாவது மாடி, தன்னார்வ நிறுவனத்தினருக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையில், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு, பள்ளி சார்ந்த மற்றும் பள்ளி சாராத, அதாவது பள்ளி வகுப்புகள் மட்டுமின்றி, பள்ளிக்கு வெளியே முறைசாரா கல்வி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை நேரடியாக அமல்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அதுவும், எந்த புதிய கல்விக் கொள்கையை, அரசியல் ரீதியாக எதிர்த்தாரோ, அந்த முதல்வர் ஸ்டாலினே, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவான, இல்லம் தேடி கல்வி திட்டத்தையும் துவங்கி வைத்து, தன்னுடைய நேரடி திட்டமாக அறிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் மற்றொரு பிரிவில், பள்ளி மாணவர்களுக்கான நேரடி தன்னார்வ கற்பித்தல் குறித்து கூறப்பட்டுஉள்ளது. அதில், சமூக அளவிலும், முன்னாள் மாணவர்கள் என்ற அளவிலும், தன்னார்வலர்களை ஈடுபடுத்தி, பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை அதிகப்படுத்த வேண்டும்.இந்த திட்டங்களில் ஈடுபடும் தன்னார்வலர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர், அரசு பணியாளர், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரின் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் பதிவு செய்து 'டேட்டா பேஸ்' தயார் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்படியே, இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான புதிய இணையதளம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை, இல்லம் தேடி கல்விக்கான தனி இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டு, இதுவரை 50 ஆயிரம் பேருக்கு மேல் பதிவும் செய்துள்ளனர்.
அதேபோல், மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் தமிழக அதிகாரிகளே, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பொறுப்பாளர்களாக உள்ளனர். ஏற்கனவே மத்திய பணியில் இருந்து, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இதற்கான தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.