'நீட்' தேர்வெழுத எழுத வந்த மாணவரை காரில் ஏற்றி சென்ற ஆட்சியர்
'நீட்' தேர்வு எழுத சென்று, வழி தெரியாமல் தவித்த மாணவரை, திருப்பத்துார் ஆட்சியர் காரில் அழைத்து சென்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துார் அருகே கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் என்ற மாணவர், திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி மலை டான் பாஸ்கோ கல்லுாரியில் உள்ள மையத்தில் நீட் தேர்வு எழுத வேண்டும்.இதற்காக அவர், நேற்று திருப்பத்துார் வழியாக பொன்னேரி வந்து நின்று கொண்டிருந்தார். அப்போது, ஏலகிரிமலைக்கு சென்று கொண்டிருந்த திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா, நின்று கொண்டிருந்த மாணவரிடம் விசாரித்தார்.அதற்கு, நீட் தேர்வு எழுத வந்ததாகவும், மையத்துக்கான வழி தெரியாமல் நிற்பதாகவும் மாணவர் கூறினார்.
உடனே, மாணவர் வேடியப்பனை, கலெக்டர் தன் காரில் அழைத்து சென்று தேர்வு மையத்தில் விட்டார். சரியான நேரத்தில் அழைத்து சென்றதால் மாணவர் தேர்வு எழுதினார்.விடுமுறை நாளில், அதிகளவு சுற்றுலா பயணியர் ஏலகிரி மலைக்கு வருவர். இதனால், தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, நேற்று ஒரு நாள் மட்டும் ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணியர் வர, கலெக்டர் அமர் குஷ்வாஹா தடை விதித்திருந்தார்.