பெருசுகளே, இளசுகளை தட்டிக் கொடுத்து, பாராட்டி, பெருமைபடுத்துங்கள்!

பெருசுகளே, பெருசுகளே! சும்மாவானும் பயமுறுத்திகிட்டிருக்காதீங்க. எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் நம் இளைஞர்களால். எந்தத் தடையையும் மீறி அவர்களால் வெற்றி காண முடியும்.
தற்போதைய பெருசுகளின் பெரிய அங்கலாய்ப்பே இதுதான்: நாங்க எப்படியோ சமாளிச்சுட்டோம். ஆனா எதிர்காலத்தில் நம்ம வாரிசுகள் எப்படித்தான் வாழப் போறாங்களோ!
இதுவரையிலான தங்கள் வாழ்க்கையில் தாங்கள் மிக சாமர்த்தியமாக பிரச்னைகளையும், சவால்களையும் சந்தித்து அவற்றிலிருந்து மீண்டு விட்டதாகவும், அதே போன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக்கூடிய இளைஞர்கள் அவற்றிலிருந்து எவ்வாறுதான் தப்பிப்பார்களோ என்ற ‘கவலை‘யும் இந்தப் பெருசுகளுக்கு!
இதே கவலையை இவர்களுக்கு முந்தைய தலைமுறை பட்டதாகத் தெரியவில்லையே! இவர்களுக்கு மட்டும் ஏன் தம் வாரிசுகள் மீது அத்தனை அவநம்பிக்கை? தன்னால்தான் தன் குடும்பம் ஓடுகிறது, தான் பணியாற்றுவதால்தான் தன் அலுவலகம் இயங்குகிறது, தான் வாங்குவதால்தான் கடைக்காரர்களுக்கு வியாபாரம் நடக்கிறது என்ற விபரீத தற்குறி கற்பனை இவர்களுக்கு!
இப்போதைய புதுப்புது கண்டுபிடிப்புகளை, வசதிகளை, மேம்பட்டப் போக்குவரத்து சாதனங்களைத் தங்களால் வாங்க முடிந்தது, அதனால் தாங்களும், தங்களைச் சார்ந்தவர்களும் சௌகரியமாக வாழ முடிகிறது, ஆனால் தன் வாரிசுகளுக்கு அந்த ‘சாமர்த்தியம்‘ இருக்குமா என்ற சந்தேகம்! அதாவது பிறரைப் பற்றிய - அவர்கள் அறிவாற்றல் மிக்க இளைஞர்களே ஆனாலும் - தாழ்வான அபிப்ராயம்!
இந்தத் தலைமுறைதான் சுனாமியைக் கண்டது. நூற்றுக் கணக்கான மனித உயிர் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமானது உண்மைதான்; அது தேசியப் பேரிடராகவே அமைந்தது என்றாலும் அதனால் உலகம் அப்படியே முடிந்தா போய்விட்டது? தொடர்ந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது? அந்தத் துன்பத்தை எப்படித் தாங்கிக் கொள்ள முடிந்தது? மீண்டுவர முடிந்தது? இப்போது நிம்மதியாக வாழ முடிகிறது?
அடுத்து கொரோனாவை அனுபவித்ததும் இந்தத் தலைமுறைதான். அந்த இரண்டாண்டு காலம் இருண்டாண்டுகளாகவே மாறிவிட்டதென்னவோ உண்மைதான். ஆனால் மொத்தமும் இருளோடிப் போய்விட்டதா என்ன? நம்பிக்கைக் கீற்று ஒளிரவில்லையா? நம்மால் நிமிர்ந்து எழ முடியவில்லையா? ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் மற்றும் லட்சக்கணக்கான மனித நேரம், பொருளாதாரத் தொய்வு என்ற பேரிழப்புக்குப் பின்னாலும், இயல்பு வாழ்க்கை திரும்பவில்லையா என்ன?
எனவே சும்மா அங்கலாய்ப்பதை விட்டுவிட்டு, சுனாமி, கொரோனா பேரிடர்கள் தம்மைத் தாக்கியபோது அவற்றை எதிர்த்துப் போராடியது, அச்சமயங்களில் தாமாக உதவிய நல்லுள்ளங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு திட்டங்கள், இவை மட்டுமன்றி, தான் தனிப்பட்ட முறையில் சந்தித்த சவால்கள், மீண்ட விதம், எல்லாவற்றையும் இளையவர்களிடம் பேசி அவர்களுடைய மனவலிமையை மேன்மையுறச் செய்ய வேண்டுமே தவிர இப்படி அங்கலாய்த்து அவர்களையும் சோர்வடையச் செய்துவிடக் கூடாது.
இன்றைய இளைஞர்களிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அலட்சியம், சோம்பல், மரியாதையின்மை, அக்கறையின்மை எல்லாம் தற்காலிகமானவையே, நிரந்தரமில்லை என்பதைப் பெருசுகள் உணர வேண்டும். அவர்களும் பொறுப்பு மிக்கவர்கள், கடமையில் கருத்தாக இருப்பவர்கள், மனித நேயம் கொண்டவர்கள் என்ற அவர்களுடைய ஆழ்மன பண்புகளுக்கு நீரூற்றி, உரமிட்டு, அவர்களைத் தட்டிக் கொடுத்து, பாராட்டி, ஊக்குவித்து பெருமைபடுத்த வேண்டும். இதுதான் இப்போதைய பெருசுகளின் கட்டாயக் கடமை.