தனியாருக்கு பாடப் புத்தகங்களை விற்க அனுமதி
பள்ளி பாடப் புத்தகங்களை, தனியார் நிறுவனங்கள் வழியாக விற்பனை செய்யும் திட்டம், மீண்டும் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம், 2011 முதல் பின்பற்றப்படுகிறது. இதில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ பாடத் திட்டம் உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்ற அனைத்திலும், ஒரே மாதிரியாக சமச்சீர் கல்வி திட்டப்படி, பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இதற்கான பாடப் புத்தகங்கள், பாடநுால் கழகம் சார்பில் வினியோகம் செய்யப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி துறையால் நேரடியாக இலவசமாக புத்தகம் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு, பாடநுால் கழகம் வழியாகவும், தனியார் வழியாகவும் விற்கப்பட்டன.இதில் தனியார் கடைகள் வழியாக, அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, 2017ல் தனியார் நிறுவனங்கள் பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. பாடநுால் கழகமே நேரடியாக விற்பனை செய்யும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போதைய ஆட்சியில், தனியார் வாயிலாக பாடப்புத்தகம் விற்கும் திட்டம், மீண்டும் அமலுக்கு வர உள்ளது.
இதுதொடர்பாக, பாடநுால் கழக மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி கல்வி துறை பாடப்புத்தகங்களை விற்பனை செய்ய, தனியார் சில்லரை விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விரும்புவோர் தங்களின் விபரங்களுடன் வரும், 5ம் தேதிக்குள் பாடநுால் கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்என, கூறப்பட்டுள்ளது.