பிறரை திருப்திப்படுத்த நினைப்பவரா நீங்கள்?

பிறரை திருப்திப்படுத்த நினைப்பவரா நீங்கள். அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். வாழ்க்கையில் 100% யாரையும் நம்மால் திருப்திபடுத்த முடியாது. கூத்தாடி குரங்கை குட்டிக்கரணம் அடிக்க வைத்து அதன் மூலம் கைதட்டல்களை பெறுவதுபோல் அல்ல வாழ்க்கை. வாழ்க்கை என்பது இயல்பாக மேடு பள்ளங்களைக் கடந்து, சுயமாக சிந்தித்து செயலாற்றி கொண்டிருக்க வேண்டியது.
இதில் நாம் செய்யும் காரியத்தால் நாம் திருப்தி அடைந்தால் போதும். மற்றவர்களை திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பிறரை திருப்திப்படுத்த நினைத்தால் நாம் நம் வாழ்க்கை தொலைத்து நிற்க வேண்டியதுதான்.
நாம் எவ்வளவுதான் மெனக்கெட்டு மற்றவர்களை திருப்தி செய்ய அவர்களுக்கு பிடித்த மாதிரியான காரியங்களை செய்தாலும் யாரும் எளிதில் திருப்தி கொள்ளப் போவதில்லை. அதில் ஏதேனும் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவரை திருப்தி படுத்துவது என்பது லேசான காரியம் இல்லை.
மனித மனம் நிறைவு கொள்ளும் ஒரே விஷயம் சாப்பாடுதான். ஏனென்றால் வயிறு கொள்ளும் மட்டும்தான் சாப்பிட முடியும். அதற்கு மேல் முடியாது. அதனால்தான் திருப்தியாக சாப்பிட்டேன் என்று கூறுகிறோம். மற்ற விஷயங்களில் திருப்தி அடைவது என்பது குதிரை கொம்புதான். எனவே இயன்றதை செய்வோம் மகிழ்வுடன் வாழ்வோம்.
உண்மையில் நம்மையே நம்மால் திருப்திப்படுத்த இயலாது. அப்படி இருக்கும்பொழுது பிறரை திருப்தி படுத்துவது என்பது சாத்தியம் இல்லாத விஷயம். பிறர் சொல்வது எல்லாம் கேட்டு அவர்கள் மனம் கோணாமல் செய்து முடிப்பது என்பது எல்லா தருணங்களிலும் நடக்காது. எனவே முடியாது என்பதை முதலிலேயே சொல்லி விடுவதுதான் புத்திசாலித்தனம்.
சில இடங்களில் தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நமக்கு நாமே யாருடைய உதவியும் இல்லாமல் நம் வாழ்க்கையில் தன்னிறைவுபெற முயற்சிக்க வேண்டும். இந்த இடத்தில் தனக்கு மிஞ்சிதான் மற்றதெல்லாம் என்பதில் தெளிவு கொள்ளவேண்டும்.
இந்த உலகத்தில் ஒவ்வொருவருடைய விருப்பும் வெறுப்பும் வேறுபடும். குணாசியங்களும், மகிழ்ச்சியின் அளவுகோலும் வேறுபடும். அதேபோல்தான் நம்பிக்கைகளும், தேவைகளும் வேறுபடும். அப்படி இருக்க நம்மால் ஒருவரை எப்படி 100% திருப்திபடுத்த முடியும். ஆசைதான் நம்முடைய தேவைகளையும், திருப்தியையும் தீர்மானிக்கிறது. உண்மையில் சொல்லப்போனால் யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கான முயற்சியிலும் இறங்க வேண்டாம்.
ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் எடுத்து அதில் ஒரு தவளையை பிடித்து உள்ளே போட்டால் அது உடனே குதித்து வெளியே வந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டு விடும். அதுவே குளிர்ந்த நீரில் தவளையைப் போட்டால் உள்ளேயே இருக்கும். பிறகு தண்ணீரை சூடாக்கும் போது ஆரம்பத்தில் சுகமாக இருப்பதால் உள்ளையே இருக்கும். ஒரு நிலைக்கு மேல் தண்ணீரின் சூடு தாங்காமல் வெளியே குதிக்க வழியும் இல்லாமல் இறந்துவிடும்.
அது போல்தான் மனிதர்கள் தன்னை சுற்றி உள்ளவர்களை திருப்தி படுத்த நினைப்பதும். ஆரம்பத்தில் மற்றவர்களை திருப்தி படுத்துவது மகிழ்ச்சியை தந்தாலும் காலம் செல்லச் செல்ல தனக்காக, தன் முன்னேற்றத்திற்காக நேரத்தை ஒதுக்காமல் சந்தோஷம் நிம்மதியை தொலைத்துவிட்டு தப்பிக்க வழி தெரியாமல் தவிப்பார்கள்.
முதலில் நம்மை நாமே திருப்திபடுத்த முயல்வோம். பிறகு அடுத்தவர்களை பற்றி யோசிப்போம். என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே!