முதுகலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி
முதுகலை எம்.டி. யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க நவ.20 கடைசித் தேதி ஆகும்.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு, ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2021- 2022ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்ட மேற்படிப்பிற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது பிற பதிவு பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டம் [BNYS] / இயற்கை மருத்துவப் பட்டயம் [N.D.(OSM)] ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய சான்று இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் தனது பெயரைத் தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் (Tamil Nadu Board of Indian Medicine, Chennai) பதிவு செய்திருத்தல் வேண்டும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மருத்துவப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திலிருந்து உரிய தகுதிச் சான்று பெற்று அதனை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்ட மேற்படிப்பு விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக 28-10-2021 முதல் 20-11-2021 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்தாலோ, தேர்வுக் குழு அலுவலகத்தாலோ வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.3000/- (ரூபாய் மூன்றாயிரம் மட்டும்) SBI Collect வழியே செலுத்த வேண்டும்.
பதிவிறக்கம் செய்யப்பட்டுப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணைப்புகளுடன் விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்ட ஆவண நகலுடனும் (e-receipt) இறுதி நாளுக்கு முன் வந்து சேர்ந்திட வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட அருந்ததியினர் / பழங்குடியின விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமான ரூ.3000/- ஐச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான இணைப்புகளுடன் உரிய உறையில், செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, அரும்பாக்கம், சென்னை – 600 106, தமிழ்நாடு என்ற முகவரிக்கு இறுதி நாளுக்கு முன் சமர்ப்பித்திட / வந்து சேர்ந்திட வேண்டும். அறிவிக்கப்பட்ட இறுதி நாள் மற்றும் நேரத்திற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் அஞ்சல் துறை, கொரியர் சர்வீஸ் தாமதம் உட்பட எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் பெறக் கடைசி நாள் 20-11-2021 பிற்பகல் 5.30 மணி வரை.
நுழைவுத் தேர்வு நாள் (தோராயமாக): 25-11-2021 முற்பகல் 9.30 மணி.
மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in ''
இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் தெரிவித்துள்ளார்.