நீட் தேர்வு பயிற்சிக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்க அரசுக்கு பெற்றோர், மாணவர் கோரிக்கை
தமிழகத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை, அரசு இலவசமாக வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுதும் 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, தரவரிசைப்படி மருத்துவ படிப்பில் சேர முடியும். இந்த தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.,டி., பாட திட்டத்தின்படி வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன.
அதனால், இந்த தேர்வில் பங்கேற்று அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள், மாநில பாடத்திட்டம் மட்டுமின்றி, என்.சி.இ.ஆர்.டி., பாட திட்டப்படியும் சிறப்பு பயிற்சிகள் பெற வேண்டும். மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே, என்.சி.இ.ஆர்.டி., பாட திட்டத்திலேயே படிப்பதால், அவர்கள் நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெற முடிகிறது.இதுபோல, மாநில பாட திட்ட மாணவர்களும், அதிக மதிப்பெண் பெற சிறப்பு பயிற்சி பெறுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக கட்டணம் செலுத்தி சிறப்பு பயிற்சி பெற முடிவதில்லை.
எனவே, அவர்களின் நலனுக்காக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அரசின் சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது. தற்போதைய தி.மு.க., அரசும் இந்த பயிற்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் பயிற்சி புத்தகங்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தனியார் நிறுவனங்களில் பயிற்சி புத்தகங்களை வாங்க, அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது.
எனவே, தமிழக பாட திட்டத்தில் 12ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அரசு தரப்பில் இலவசமாக நீட் பயிற்சி புத்தகங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் வாயிலாக, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவ படிப்பில் எளிதாக சேர முடியும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு போராட வேண்டிய நிலையும் இருக்காது என ஒரு தரப்பு பெற்றோரும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.