நம்பிக்கை அதானே எல்லாம்!
உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு.
பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.
நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.
வாகனத்திலோ, இரயிலிலோ, விமனத்திலோ, பயணம் செய்யும்போது அந்த பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் பயணம் செய்ய முடியும். விபத்து ஏற்படுமோ என்ற பயம் வந்துவிட்டால் பயணம் பயங்கரமானதாகத்தான் தோன்றும்.
வங்கியில் பணம் சேமிக்கின்றோம், அந்த பணம் பதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் பயமின்றி இருக்க முடியும். நம்பிக்கை இல்லாவிட்டால் பணம் பற்றிய கவலை தான் மனம் முழுவதும் இருக்கும்.
கணவன் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அன்றாட வேலைகளும், இல்லறமும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் குடும்பத்தில் குழப்பங்கள்தான் நிறைந்திருக்கும்.
தொழில் ஒன்றை தொடங்குகிறோம் அதை சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அதை சிறப்பாக செய்ய முடியும். நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்துடனே ஆரம்பித்தால் அது நஷ்டத்தில் தான் முடியும்.
இன்னும் எத்தனையோ விஷயங்கள் நம்பிக்கையால்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பவேண்டும். நம்மால் முடியுமா என்று சந்தேகப்படக்கூடாது.
நம்பிக்கையை இரண்டு விதமாக சொல்லலாம்
1. தானே ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை
2. நிர்பந்தத்தால் ஏற்படும் நம்பிக்கை
ஒரு மாணவன் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்ப முதலே நம்பிக்கையுடன் அன்றாடம் படித்தால் அது தானாக ஏற்படுத்தி கொள்ளும் நம்பிக்கை.
தேர்வு நெருங்கும் சமயத்தில் குறைந்த காலத்தில் படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் படிப்பது நிர்பந்தத்தால் வரும்.