தமிழில் அறிவியல் திறனறி தேர்வு அடுத்த ஆண்டு முதல் நடத்தப்படும் அரசு உறுதி
அறிவியல் திறனறி தேர்வை அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் நடத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது
.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனு: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கே.வி.பி.ஒய் எனப்படும் 'கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா' திட்டம் வாயிலாக அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தகுதி தேர்வு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் மட்டும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே அறிவியல் திறனறி தேர்வை அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி ''மற்ற மொழிகளில் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்க ஆறு மாதங்களாகும். அதனால் அடுத்த ஆண்டில் இருந்து நடத்த முடியும். மற்ற மொழிகளிலும் நடத்த வேண்டும் என்றால் இந்த ஆண்டுக்கான தேர்வை கைவிட வேண்டியது வரும்'' என்றார்.
இதையடுத்து முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மற்ற மொழிகளில் திறனறி தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உறுதி அளித்ததால் அதில் குறுக்கிட வேண்டியது இல்லை. இந்த ஆண்டில் இதர மொழிகளில் நடத்த இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே அடுத்த ஆண்டில் மற்ற மொழிகளில் திறனறி தேர்வு நடத்துவதை மத்திய அரசு உறுதி செய்வதை பொறுத்து இந்த ஆண்டில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் நடத்த அனுமதிக்கலாம்.இதற்கான மனுவை தாக்கல் செய்வதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்ததால் விசாரணை நவ.15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.