சுதந்திரமே உண்மையான மகிழ்ச்சி!

நம்மில் பல பேர் நினைப்பது என்னவென்றால், நமக்கு உண்பதற்கு உணவு, இருப்பதற்கு இடம், நல்ல வேலை, பாதுகாப்பான சூழ்நிலை இருந்தால் போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. சுதந்திரமான வாழ்க்கை, பிரச்னைகளை எதிர்க்கொண்டு சமாளிப்பது போன்ற வாழ்க்கை தான் மனிதனுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது. இதைப்பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் சீடன் ஒருவன் தன் குருவிடம், ‘சந்தோஷமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும் குருவே?' என்று ஒரு கேள்வியைக் கேட்டான். அதைக்கேட்ட குரு, ‘சந்தோஷமாக வாழ்வது என்றால் உன்னைப் பொறுத்தவரை என்ன?’ என்று கேட்டார். அதற்கு அந்த சீடன், உண்பதற்கு உணவு, இருப்பதற்கு இடம், நல்ல வேலை மற்றும் பாதுகாப்பிருந்தால் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கலாம்' என்று கூறினான்.
இதைக்கேட்ட குரு அந்த சீடனை ஒரு கோழிப் பண்ணைக்கு அழைத்துச் சென்றார். அந்த கோழிப் பண்ணையில் உள்ள கோழிகளை காட்டி, ‘இந்த கோழிகளுக்கு உண்ண உணவு, இருக்க இடம், முட்டைப்போடும் வேலை, நாய், பூனை போன்றவற்றிடம் இருந்து பாதுகாப்பு ஆகியவை கிடைக்கிறது. ஆகவே, இந்த கோழிகள் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். இதற்கு சீடன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தான்.
சிறிது தூரம் தள்ளி குரு சீடனை அழைத்துக்கொண்டு வந்து காட்டினார். அங்கே சில கோழிகள் சுதந்திரமாக உணவு தேடிக்கொண்டிருந்தன. அதைக் காட்டி குரு கூறினார், ‘இந்த கோழிகள் உணவைத்தேடி சாப்பிடுகின்றன, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கின்றன, தங்குவற்கென இடம் கிடையாது. இருப்பினும், இவை சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கின்றன.
அந்த பண்ணையில் இருக்கும் கோழிகளுக்கு எல்லாம் கிடைத்தாலும் சுதந்திரம் என்பது இல்லை. ஆனால், இப்படி வெளியே திரிந்துக்கொண்டிருக்கும் கோழிகள் உணவு, பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்காக போராடினாலும் மகிழ்ச்சியாக இருக்கின்றன’ என்று சொன்னார்.
சந்தோஷமாக வாழ்வது என்றால் என்னவென்று நீ என்னிடம் ஒரு கேள்வி கேட்டாய் அல்லவா? அதற்கான பதில், ஒன்று அந்த பண்ணையில் உள்ள கோழிகளைப் போல பாதுகாப்பான ஆனால் கூண்டில் அடைக்கப்பட்ட வாழ்வை நாம் தேர்வு செய்யலாம் அல்லது இந்த கோழிகளைப் போல ஆபத்தை எதிர்க்கொண்டு எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவிக்கலாம்.
வெறுமனே உயிர் வாழ்வதனாலோ அல்லது அடிப்படை தேவைகளை சந்திப்பதாலோ சந்தோஷம் கிடைக்காது. உண்மையான சந்தோஷம் என்பது சுதந்திரமாகவும், ஆபத்தை எதிர்க்கொண்டும், வாழ்வில் நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளும் தைரியத்தில்தான் அடங்கியுள்ளது என்று கூறினார். இதைப் புரிந்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.