சவால்களுக்குப் பயந்து உன் வாழ்க்கையை விட்டுவிடாதே!
ஒருவன் தன் தொழிலை இழந்தான், உறவுகளை இழந்தான், ஆன்மீகத்தை இழந்தான், தன்னம்பிக்கையை இழந்தான், இறுதியில் தன் வாழ்வையே முடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தான். அடர்ந்த காட்டுக்குள் வேகமாக ஓடினான். மீண்டும் ஒருமுறை கடைசியாக இறைவனிடம் பேசிப் பார்க்கலாம் என யோசித்தான்.
இறைவனிடம் கேட்டான், "இறைவா நான் இன்னும் உயிருடன் இருக்க ஒரு காரணத்தை மட்டும் உன்னால் கூற முடியுமா? வெறும் ஒரு காரணம் மட்டும் சொல் நான் உயிருடன் இருக்கிறேன் என்றான்."
இறைவன் பதிலளித்தான், "இந்த காட்டில் தனிமையில் உள்ள உன் அருகில் என்ன இருக்கிறது? வெறும் புற்களும் உயர்ந்து வளர்ந்த மூங்கில் மரங்களும் மட்டும்."
"அதனால் எனக்கு என்ன பயன்" என அந்த மனிதன் கேட்டான்.
"நான் சொல்வதை நன்றாகக்கேட்டுக்கொள்" என்று இறைவன் கூறத் தொடங்கினான்.
நான் இந்த உலகை படைத்தது வறண்டு கிடந்த பூமியில் ஒரே நேரத்தில் தான் இந்த புல் விதைகளையும், மூங்கில் விதைகளையும் விதைத்தேன்.
முதல் வருடத்தில் புல் விதைகள் முளைத்து, பூமியெல்லாம் பரவி, வறண்டு கிடந்த இந்த பூமியை பச்சைப் பசேலென மாற்றிவிட்டன. ஆனால் மூங்கில் விதைகளோ முளைக்கவில்லை, அவை முளைப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை.
இரண்டாவது வருடமும் பார்த்தேன், புற்கள் இன்னும் வளர்ந்து பெருகியிருந்தன. ஆனால் மூங்கில் விதைகள் அப்படியே இருந்தன. மூன்றாவது வருடம் பார்த்த போதும் நிலமை இது தான். நான்காவது வருடமும் இதே நிலை தான்.
ஆனால் ஐந்தாவது வருடம் பார்த்த போது ஒரு மூங்கில் விதை மட்டும் முளைவிட்டிருந்தது. அந்நேரம் புற்களுடன் ஒப்பிடும் போது அது மிகவும் சிறிய ஒரு செடியாகவே இருந்தது.
ஆறாவது வருடம் பார்க்கிறேன், 100 அடிகளுக்கு மேல் வளர்ந்த மூங்கில் மரங்கள் பூமியெங்கும் வளர்ந்திருந்தன. புற்களை விட பல மடங்கு உயரமாக அவை வளர்ந்திருந்தன.
ஐந்து வருடங்களாக மூங்கில் விதைகள் ஏன் காத்திருந்தன? அவை எந்தக் காலநிலையையும் சகித்து வாழும் ஆற்றலை ஐந்து வருடங்களாகக் கற்றுக்கொண்டுள்ளன.
மிக உயரமாக வளர தம் வேர்களை பலப்படுத்திக்கொண்டுள்ளன. தன்னைப் போதுமான அளவு பலப்படுத்திக்கொண்டதும் முளைக்க ஆரம்பித்துள்ளன. இப்போது எந்தவொரு பருவநிலை மாற்றத்தையும் தாங்கும் சக்தி அவற்றுக்கு உண்டு.
நான் எனது படைப்புக்களுக்கு அவற்றால் தாங்க இயலாத எந்த சவாலையும் கொடுப்பதில்லை. நீயும் அப்படித்தான்.
என்னைப் பொறுத்த வரையில் நீ இன்னும் முளைக்க ஆரம்பிக்கவேயில்லை. இப்போது தான் நீ வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை அறிந்துகொள்கிறாய்.
அவை உன் வாழ்வில் ஏற்படுத்தும் சவால்களைப் பற்றிக் கற்றுக்கொள்கிறாய். நீ இப்போது தான் உன் வேர்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறாய். அதனால் தான் உன் வாழ்வையே முடித்துக்கொள்ள முடிவெடுக்கும் அளவுக்குத் துணிச்சல் உனக்கு வந்தது.
நீ துணிச்சலாக முடிவெடுக்க வேண்டியது உன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளவதற்காக அல்ல. என்ன பிரச்சினை வந்தாலும், எந்த சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டாலும், உன் வாழ்வை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து காட்டுவேன் என்றே நீ துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும்.
மூக்கில் மரங்களுக்கோ புற்களைப் போல் ஒரு வருடத்தில் முளைத்துப் பெருக முடியவில்லை. ஆனால் புற்களுக்கோ மூங்கில் மரங்களைப் போல் உயரமாக வளர முடியவில்லை. உன் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்து. உனது வாழ்க்கைப் பயணம் வேறு, அவர்களின் வாழ்க்கைப் பயணம் வேறு.
உன் வாழ்க்கை எனும் சவாலில் நீ வெற்றியடைவதா அல்லது தோற்றுப் போவதா என்பதை நீதான் முடிவுசெய்ய வேண்டும் என இறைவன் கூறி முடித்தான்.