புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த பல்கலைக்கு யு.ஜி.சி., கடிதம்
புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை இன்னும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என, துணை வேந்தர்களுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலை துணை வேந்தர்களுக்கு, யு.ஜி.சி., தலைவர் டி.பி.சிங் அனுப்பியுள்ள கடிதம்:புதிய கல்வி கொள்கையை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பல்கலையும், கல்லுாரிகளும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பல்கலையிலும், புதிய கல்வி கொள்கைக்காக தனி மையம் உருவாக்க வேண்டும். உயர் கல்வியில் மாணவர்கள் எந்த செமஸ்டரிலும் சேரவும், வெளியேறவும் அனுமதி அளிக்க வேண்டும்.
மாணவர்களின் தேர்வு மதிப்பெண் மற்றும் கிரெடிட் மதிப்பெண்களை சேமிக்கும் வகையில், மத்திய அரசின் 'கிரெடிட் டிஜிட்டல்' வங்கியில் இணைய வேண்டும்.அனைத்து பட்டப் படிப்புகளிலும் நேரடி களப்பயிற்சி மற்றும் தொழில் பழகுனர் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.தொலைநிலை கல்வியில் பட்டப் படிப்புகளை அதிகரித்து, உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
உயர் கல்வியை சர்வதேச அளவுக்கு எடுத்து செல்லும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளிநாட்டு மாணவர்களின் வசதிக்கு, தொடர்பு அதிகாரி மற்றும் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்.வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் வெளிநாட்டு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த, உரிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.