கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர உரிமை இல்லை உயர்நீதி உத்தரவு
கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, பள்ளிக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மேல் முறையீடு செய்தனர். இதை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன். ஆர்.விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, “ஆசிரியர் ஓய்வு பெற்றால், அவர் நடத்திய பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் இருந்தால், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவை மேற்கொண்டு தேவையில்லை. அதனால், அவர்களது கோரிக்கையை அரசு நிராகரித்தது. உபரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், மறு நியமனம் செய்ய மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய ஆசிரியர்கள் தரப்பு, கல்வியாண்டு மத்தியில் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று விளக்கம் அளித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்குவது தொடர்பாக 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், உபரி ஆசிரியர்கள் இருந்தால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். உபரி ஆசிரியர்கள் உள்ள நிலையில், கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், மறு நியமனம் கோர எந்த உரிமையும் இல்லை” என்று உத்தரவிட்டனர்.