உண்மையான ஆளுமைத்திறன் எது?
தலைமை என்பது நீங்களாக அறிவித்துக்கொள்ளும் அந்தஸ்து அல்ல. தானாக எடுத்துக்கொள்ளும் தலைமைப் பதவி அருவருப்பானது. உங்கள் பங்களிப்பைப் பார்த்து மற்றவர்கள் உங்களைத் தலைவராக ஏற்கவேணடும். ஒரு தலைவனுக்கு மற்றவரைக்கட்டுப்படுத்தி அடக்கியாளும் வலிமை அவசியமா? தேவையேயில்லை. அடுத்தவர் கைகளில் விலங்குகளைப் பூட்டிவிட்டு அவர்கள் சிறப்பாக பணியாற்றி வேண்டும் என்று எதிர் பார்த்தீர்களானால் அது வடிகட்டிய முட்டாள்தனம். அவர்களுக்கு சுதந்திரம் இருந்தால்தான் முழுமையான ஈடுபாட்டுடன் திறமையைக் காட்டுவார்கள்.
தலைவன் மற்றவரை விடத் திறமையானவராக இருக்க வேண்டுமா?. அவசியமே இல்லை. மற்றவர்களிடம் மறைந்திருக்கும் திறமையை எப்படி வெளிக்கொணர்கிறீர்கள் என்பதே முக்கியம். எல்லோரும் முழுதிறமையைப் பயன்படுத்த மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத்தாண்டிபோக பலருக்குத் தெரியாது. அவர்களுக்கு அந்த எல்லைகளைத் தகர்த்தெரியத் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொடுத்தால்போதும். அப்படி அவர்களைத் தூண்டி ஊக்குவிப்பதே ஒரு நல்ல தலைவனுக்குத் தேவையான தகுதி.
ஒரு ஜோக் உண்டு. கப்பலில் கேப்டன் குரல் ஒலித்தது. கப்பல் அடித்தளத்தில் சிறு ஓட்டை விழுந்து விட்டது. தண்ணீர் உள்ளே வந்து விட்டது கப்பலின் எடையைக் குறைக்க வேண்டும். பயணிகள் தேவையற்றவை கடலில் தூக்கி எறியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அமெரிக்கன் அருகிலிருந்த கம்ப்யூட்டர்களை எடுத்து வீசினார். எங்கள் நாட்டில் இது எக்கச்சக்கமாக கிடைக்கும் என்றான். ரஷ்யன் புத்தகங்களை வீசி எறிந்தான். எங்கள் நாட்டில் ஏராளமானது கிடைக்கும் என்றான். இந்தியன் ஒருவன் அருகில் நின்ற அரசியல் தலைவரை தூக்கி கடலில் வீசினார் எங்கள் நாட்டில் தெருவுக்குத் தெரு இவர்கள் கிடைப்பார்கள் என்றானாம். ஒரு தலைவன் என்பவன் இப்படியா கணிக்கப்பட வேண்டும்? பதவியால் மற்றவர்களைவிட சில அடி உயரத்தில் உட்கார்ந்து விடுவது அல்ல நல்ல தலைமை. மற்றவர்களை ஊக்குவிக்கும் மனம் உங்களுக்கு வேண்டும்.
உங்கள் அன்பினாலும் அக்கறையாலும் உங்களிடம் மாறாத அன்பு கொண்டவர்களாக அவர்கள் மாறவேண்டும். உங்கள் அண்மை அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் தரவேண்டும்.
நிலம் வாங்கி விற்கும் கம்பெனியில் புதிதாக சேர்ந்திருந்தான் அந்த இளைஞன். முதலாளி எதிரில் வந்து நம் வாடிக்கையாளர் வந்திருக்கிறார் நாம் விற்ற நிலத்தில் இந்த மழையில் தண்ணீர் நான்கடி ஆழத்துக்கு நிற்கிறதாம். பணத்தைக் கேட்கிறார் என்றான். முதலாளி குறைத்தார் என்ன விற்பனையாளர் நீ?. அவனிடம் பேசிய எப்படியாவது ஒரு படகை அல்லவா விற்றிருக்க வேண்டும் என்றார்.
இப்படிப்பட்டவர்களின் கீழ் வேலை செய்கிறீர்களானால் வணிகத்தில் மேன்மேலும் லாபம் சம்பாதிக்கும் வழியைக் தெரிந்து கொள்ளலாமே தவிர சிறந்த தலைவன் ஆவதற்கு வாய்ப்பே இல்லை.
உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை இனிமையாக மாற்றுவதன் மூலமே, அவர்களிடமிருந்து முழுமையான ஈடுபாட்டையும் திறமையையும் எதிர்பார்க்கலாம். உங்கள் பங்களிப்பு மதிப்பு மிக்கது என்று உணர்ந்துவிட்டால் இயல்பாகவே மற்றவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்வார்கள். தடையின்றி தலைவராக ஏற்பார்கள்.